பிராமண குருக்களை திருமணம் செய்தால் 3 லட்சம் :தெலுங்கானா அரசு அறிவிப்பு!
இந்து ஆலயங்களில் வேலை செய்யும் குருக்களை கல்யாணம் செய்து கொண்டால் மூன்று லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெலுங்கானா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.பெண்களும்,பெண்களின் குடும்பத்தாரும் பணக்கார இளைஞர்களையே நாடி செல்வதால் கோவில்களில் வேலை செய்யும் பிராமண குருக்களுக்கு திருமணம் ஆவது சிரமமாக இருப்பதால் அதை உடனே சரி செய்ய வேண்டும் என்பதுதான் தெலங்கானா அரசின் இந்த திட்டத்திற்கு கூறியிருக்கும் காரணம்.மூன்று லட்ச ரூபாய் கொடுப்பது மட்டுமின்றி, திருமண செலவுக்காக தம்பதியினருக்கு ஒரு லட்ச ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
“முன்பு போல இல்லாமல், பெண்கள் பேராசையோடு மாப்பிள்ளைகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் கூட வேலை உறுதியாக இல்லாததால் கல்யாணம் நடக்காமல் இருக்கிறார்கள். சமூகத்தில் பெரிய மதிப்பு இல்லாததால் ஆலயங்களில் வேலை செய்யும் பிராமண குருக்களுக்கு எல்லாம் பெண் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது” என தெலுங்கான பிராமின் சம்க்ஷீமா பரிஷத்தின் தலைவர் கே வி ரமணாச்சாரி சொல்லியிருக்கிறார். இவர் தெலுங்கானா முதலவரின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது யோசனையில்தான் இந்த திட்டத்தை தெலங்கானா அரசு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மேலும் விசாரித்த போது, “அண்மை காலமாக் தெலுங்கானாவில் உள்ள கோயில் குருக்களுக்கு திருமணம் நடைபெறுவதென்பது அபூர்வமாகி போவதாக கூறப்பட்டது. காரணம் இது போன்ற கோயில் குருக்கள் மற்றும் வேதம் ஓதும் நபர்களுக்கு குறைந்தளவு ஊதியம் வழங்கப்படுவது இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில்தான் தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பின் கூட்டம் அதன் தலைவர் கேவி ரமணச்சாரி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இதில், பிராமணர்களுக்கு பிரச்சனை குருக்களுக்கு குறைவான ஊதியம் கொடுப்பதும், சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே இதற்கு காரணம் என்றும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இது பிராமண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்தே கோவில் குருக்கள் மற்றும் வேத பண்டிட்களை திருமணம் செய்துகொள்ளும் மணமகள்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதனை தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பும் உறுதி செய்துள்ளது. ஃபிக்ஸடு டெப்பாஸிட் திருமணத்திற்கு பின் இருவரின் பெயரிலும் ஜாய்ன்ட் அக்கவுன்ட் தொடங்கப்பட்டு ஃபிக்ஸடு டெபாஸிட்டாக 3லட்சம் ரூபாய் இருப்பு வைக்கப்படும். தம்பதிகள் திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்தே இந்த தொகையை பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமண செலவுக்காக முன்கூட்டியே ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பிராமணர் தொழில் முனைவோர் ஊக்குவிப்பதற்காக பிராமண தொழில்துறை கைத்தொழில் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதுதொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்பிய 59 பேருக்கு 3.29 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. அத்துடன் 10 ஆம் வகுப்பு, இண்டர், டிகிரி மற்றும் பி.ஜி படிக்கும் 252 பிராமண மாணவர்களுக்கு தெலங்கானா அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. வெளி நாடுகளில் உயர் கல்வியில் ஆர்வம் கொண்ட 56 பிராமண மாணவர்களுக்கு ரூ. 1.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத் திட்டங்களும் ஏழை பிராமணர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்று தகவல் சொன்னார்கள்..