பேப்பர் திருத்தியதில் குளறுபடியால் பெயிலான பள்ளி மாணவர்கள் பலர் தற்கொலை! :

தெலங்கானாவில்  டி.பி.ஐ.இ. எனப்படும் தெலுங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியத்தின் சார்பில் இன்டர்மீடியட்(11 மற்றும் 12ம் வகுப்பு) தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடை பெற்றன. இந்த  தேர்வு முடிவு வெளியான நிலையில், மாணவர்கள் 20 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தவறுதலாக மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

தெலங்கானாவில் 2018-19ம் கல்வி ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த போது, இவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். தேர்வு எழுதிய மாணவர்களில், 3 லட்சம் பேர் தோல்வி அடைந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த பரபரப்பு அதை விட அதிர்ச்சிகரமானதாக இருந்தது. நன்கு தேர்வு எழுதிய மாணவர்களும் தேர்வில் தோல்வி அடைந்ததோடு, ஒரு சில பாடங்களில் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றிருந்தது தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

மிக மோசமான மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களில் 20 பேர் தற்கொலை செய்து கொண்டது அவர்களின் குடும்பத்திற்கும் மாநில அரசுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏதோ தவறு நிகழ்ந்திருப்பதை உணர்ந்த தெலங்கானா அரசு, மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது. இக் குழு தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதில், நவ்யா என்ற மாணவியின் தெலுங்கு மொழித்தாளை திருத்திய உமாதேவி என்ற ஆசிரியை, 100க்கு 99 மதிப்பெண்கள் போடுவதற்குப் பதிலாக பூஜ்ஜியம் மதிப்பெண்களை போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல், பல்வேறு மாணவர்களின் மதிப்பெண்கள் தவறுதலாக குறைக்கப்பட்டதால், அவர்கள் தோல்வி அடைந்தது விசாரணையின் முடிவில் தெளிவானது. இதனையடுத்து, தவறிழைத்த ஆசிரியர்களை பணியிடைநீக்கம் செய்த தெலங்கானா அரசு, அவர்களுக்கு அபராதமும் விதித்தது. தெலங்கானா அரசு கல்வித் துறையில் உரிய கவனம் செலுத்தாததே மாணவர்களின் உயிர் இழப்புக்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ள அம்மாநில எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய உள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது. வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமானது. உங்களுக்காக இன்னும் நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றது. உங்களுடைய தற்கொலை உங்கள் பெற்றோர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிடும். எனவே சிந்தித்து செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.