பட்ஜெட் எதிரொலி: பிரபல நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு வரலாம்!

மோடி தலைமையிலான இரண்டாம் கட்ட ஆட்சியில் முதலில் போடப்பட்ட பட்ஜெட் அறிவிப் பினால், பொதுப் பங்குகள் தொடர்பான அறிவிப்பால் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை விற்க நேரிடலாம் என தகவல் வெளி யாகியுள்ளது.

அதாவது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், பொதுமக்கள் வைத்துள்ள பங்குகளின் அளவு, தற்போது குறைந்தது 25 சதவீதம் இருக்க வேண்டும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த அளவு 35 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்த திட்டம் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தால் அமல்படுத்தப்படும்போது, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், விப்ரோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை பொதுமக்களுக்கு விற்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 57 பில்லியன் டாலர்கள், அதாவது 3.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க நேரிடலாம் எனவும் பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நிறுவனங்கள் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்தும் என்பதால், அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

30-க்கும் மேற்பட்ட, அரசுத்துறை நிறுவனங்களிலும், பொதுமக்களின் பங்குகள் 35 சதவீதத்திற்கு குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பங்குவிற்பனை மூலம் நிதி திரட்ட விரும்பாத பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள், பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தகவல் வருகிறது.