September 25, 2021

முள்ளின் மேல் துணியைப் போட்டு அதில் பொத்தல்கள் விழுவதற்குக் காரணம் யார்?

தனித் தனிச் சம்பவங்களை வைத்துக்கொண்டு மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்களா? சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டமும், தனது சங்கிலியைப் பறித்தவனை விரட்டிச்சென்ற நந்தினியும் ஒரு பெரியவரும் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்ததும் தனித்தனி சம்பவங்களா? மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சம்பவங்களால் பாதிக்கப்படுகிறவர்கள். குடும்பத்திற்கு ஏற்படுகிற கெட்ட பெயர் உள்பட பல இழப்புகளைச் சந்திக்கிறவர்கள். ஆகவே அத்தகைய சம்பவங்கள் வருகிறபோது அவர்கள் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான்.

tasmac july 8

ஆனால் பட்டினப்பாக்கம் நிகழ்வுகளைத் தனித்தனி சம்பவங்களாகப் பார்க்க முடியாது. நந்தினி மரணத்திற்குக் காரணமானவனின் மனைவி, தன் கணவன் குடிப்பழக்கத்தில் விழுந்ததால்தான் பணத்திற்காகக் குற்றங்களில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறியிருப்பதைத் தள்ளிவிட முடியாது.சில தலைமுறைகளே அழிக்கப்பட்டுவிட்ட, அவர்களது முன்முனைப்புகளும் போராட்ட உணர்வுகளும் மழுங்கடிக்கப்பட்ட விவகாரம் இது. தனியார் கடைகளில் ஆங்காங்கே சிலர் குடித்த நிலை மாறி, அரசாங்க மதுக்கடைகள் தெருவுக்குத் தெரு வந்துவிட்டன. குடிப்பதற்கு வா வா என்று இளைஞர்களை இழுத்துக் குடிப்பழக்கத்தை வளர்த்துவிட்டன. திடுதிப்பென அத்தனை கடைகளையும் ஒரே நேரத்தில் மூடுவது வேறு பல சிக்கல்களை ஏற்படுத்தும், வேறு வகையான குற்றச்செயல்களுக்கு இட்டுச் செல்லும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

முள்ளின் மேல் துணி விழுந்தது போன்ற நிலைமை இது. முள்ளின் மேல் விழுந்த சேலையை எடுத்தாலும் முள்ளை எடுத்தாலும் கிழிவது என்னவோ சேலைதான் என்ற பழமொழியே உண்டு. அதே போல் டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான். ஆனால், முள்ளின் மேல் துணியைப் போட்டு அதில் பொத்தல்கள் விழுவதற்குக் காரணம் யார்? இதற்கான பொறுப்பிலிருந்து இன்றைய அதிமுக ஆட்சி மட்டுமல்லாமல் முந்தைய ஆட்சியாளர்களான திமுக-வும் நழுவிவிட முடியாது.

படிப்படியாக மதுக்கடைகளை மூடப்படும் என்று அறிவித்த அரசு, முதல் கட்டமாக மூடியுள்ள 500 கடைகள் எவை என்று அறிக்கை வெளியிடுவதற்கு ஏன் மறுக்க வேண்டும்? துறை சார்ந்த வலைத்தளத்தில் அந்தத் தகவல்களை யாரும் பெற முடியும், தனியாக அரசு அறிக்கை விட வேண்டியதில்லை என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்தத் தகவல்கள் எடுக்க முடியாத தகவல்கள் அல்ல என்கிறார் ஆளுங்கட்சிப் பிரதிநிதி. எடுக்க முடியாத தகவல்கள் அல்ல என்றால் அரசாங்கத்தால் கொடுக்க முடியாத தகவல்களாகவும் இருக்க முடியாதல்லவா?

அந்த 500 கடைகளின் பட்டியலுக்குள் வரவில்லை என்பதால், பட்டினப்பாக்கம் கடை போன்ற, கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற, மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிற கடைகள் தொடரத்தான் வேண்டுமா?
ஜனநாயகம் எப்போது முழுமையடைகிறது என்றால் அரசின் வெளிப்படைத்தன்மையில்தான். ஜனநாயகத்தை மதிக்கிற அரசு என்றால், வெள்ளையறிக்கை கோருகிற விஜயகாந்த்துக்கு அல்லது வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு வெள்ளையறிக்கை தர வேண்டாம், ஆனால் மக்கள் அறிவதற்காக அந்தத் தகவல்களைத் தர வேண்டியதுதானே?

யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குப் போடுவதாக வைத்துக்கொள்வோம். நீதிமன்றம், மூடப்பட்ட மதுக்கடைகள் பற்றிய பட்டியலைத் தருமாறு அரசுக்கு ஆணையிடுவதாகவும் வைத்துக்கொள்வோம். அப்போது நீதிமன்றத்திடம், அந்த விவரங்களைத் தர முடியாது என்று அரசு சொல்லுமா? நீதிமன்றத்திற்குத்தான் பதில் சொல்வோம், மக்களுடைய பிரதிநிதிகளாகிய அரசியல் கட்சிகளுக்கு பதில் சொல்ல மாட்டோம் என்பது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்கும்? ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பதாக இருந்தால் நீதிமன்றத்தை விட சட்டமன்றத்திற்கும் கட்சிகளுக்கும் மக்களுக்கும்தான் அரசு பதிலளிக்க வேண்டும்.

குமரேசன் அசாக்