April 14, 2021

தீபாவளி கோலாகலம்: 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

இந்திய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வருவதாக உலகளாவிய முன்கணிப்பு நிறுவனமான ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்கம் சராசரியாக 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் டிசம்பர் பணவியல் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கக்கூடும் என்றும் அது கூறியுள்ளதை தமிழகம் நிரூபித்துள்ளது. ஆம்.. தமிழகத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாளும் சேர்த்து 355 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றிருந்தது. இந்தாண்டு அதைவிட 111 கோடி ரூபாய் அதிகரித்து 465 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது எனக் கூறப்படும் நிலையில் முந்தைய ஆண்டுகளை விட அதிகளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான வெள்ளியன்று 227 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கும், தீபாவளியன்று 237 கோடியே 91 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103 கோடியே 82 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 87 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 84 கோடியே 56 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் மது விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.