August 14, 2022

தரமணி – திரை விமர்சனம்!

காதலர்கள் கணவன் மனைவியாகலாம். கணவன் மனைவிதான் காதலர்கள் ஆக முடியவில்லை. கணவனும் மனைவியும் அன்பானவர்களாக இருக்கலாம். ஆனால், சுதந்திரமான காதலர்களாக அவர்களால் குடும்பத்திற்குள் நீடிக்க முடியவில்லை.குடும்பம் எப்பொழுதுமே விதிகளை முன்னிறுத்துகிறது. ஒழுங்குகளின் பாற்பட்டு நிற்கிறது. ஆணும் பெண்ணும் அன்பாகப் பேசிக் கொள்ள, ஒன்று சேர, சிரித்து மகிழ, எல்லாவற்றுக்கும் நேரம் காலம் இருக்கிறது. வீட்டுக்குள் உறங்கி எழுந்தவுடன், மனைவிக்கு முத்தம் கொடுத்தபடி காலை வணக்கம் சொல்ல முடியாது. (சொல்லக்கூடாது என்பதல்ல)கையில் தேநீர் கோப்பையோடு, வானம் பார்க்க இருவரும் சேர்ந்து நிற்க முடியாது. குழந்தைகள் முன்னால், கணவன் மீதுள்ள அன்பை மனைவியால் வெளிப்படுத்த முடியாது. தன்னுடைய தாயும் தந்தையும் இருந்தால், மனைவியின்மீதான அன்பை கணவனால் வெளிப்படுத்த முடியாது. எல்லாவற்றுக்கும் வரையறை. எல்லாவற்றுக்கும் கட்டுப்பாடு. யார் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்? உடைக்கவே முடியாத விதிகளா இவ்விதிகள்? ஆழமாக யோசித்துப் பார்த்தால், நம்முடைய கண்களை நாமே இறுக்கி மூடிக்கொள்கிற சிறுபிள்ளைத்தனம்போல் தான் இருக்கும். உணர்ந்து கொண்டால் நிமிடத்தில் கண்களைத் திறந்து கொள்ள முடியும்.- கவிஞர். அ வெண்ணிலா எழுதியவை இவை.

சில மாதங்களுக்கு முன்னால் வந்த தகவல் படி ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மத்தியில் விவாகரத்து கோரும் நிலை அதிகரித்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது. அந்த ஐ.டி பெண்கள் அந்த மன நிலைக்கு வருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து மனநல ஆலோசகர்,குடும்ப நல ஆலோசகர் மற்றும் செக்ஸ் ஆலோசகர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதில் பல பெண்களின் அடிப்படை பிரச்னையே செக்ஸ் பிரச்னை தான் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் கல்வி மற்றும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் விவாகரத்தும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் தற்போது ஐ.டி பெண்கள் அதிகமாக விவாரத்துக்கோரி வழக்கறிஞர்களை சந்திக்கிறார்கள் எனற ஒரு விபரமும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி வழக்கறிஞர்களே பரிந்துரை செய்து மனநல ஆலோசகர், குடும்ப நல ஆலோசகர் மற்றும் செக்ஸ் ஆலோசகர் போன்றவர்க ளிடம் அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது என்று தெரிவிக்கப்படிருந்தது.

மேற்கண்ட இரண்டு விவகாரங்களை இணைத்து பல்வேறு புள்ளிகள் வைத்து ‘தரமணி’ என்ற பெயரில் ஒரு கோலம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குநர் ராம். நம் தமிழ்மொழியை முக்கிய பாடமாய் கற்ற ஒருவனுக்கு நேரும் கஷ்டங்களையும், ஐடி துறை கண்டிருக்கும் பெரும் வீக்கத்தையும் பற்றி தன் முதல் திரைப்படத்தில் அழுத்தமாக சொல்லி கற்றது தமிழ் ராம் என்று பெயரெடுத்தவர், தன் அடுத்தப் பட்த்தில் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் இன்றைய பள்ளிகள் எப்படிப்பட்ட கல்விமுறையை பின்பற்றுகிறது என்பது பற்றியும் விரிவாக அலசியவர் ராம். அதே சமயம் ஆகஸ்ட் 2013இல் ‘தங்கமீன்கள்’ படத்தின் ரிலீஸிற்கு முன்பே அறிமுக நாயகன் வசந்த் ரவி மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் தனது அடுத்த படமான ‘தரமணி’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார் ராம். பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ‘தரமணி’ திரைப்படம், தர்போது வெளியாகியுள்ளது. அந்த நீண்ட இடைவெளியை படம் தொடங்கிய செகண்டிலிருந்து அடிக்கடி மழையை பெய்ய விட்டபடி கதை சொல்லும் டைரக்டர் இடையிடையே ஃபேஸ்புக் தனமாக சமீபத்திய ட்ரெண்டிங் கமெண்ட்ஸ் அடித்து கைத் தட்டல் வாங்குவதுடன் படத்தின் நூலாம்படையை கண்ணிலிருந்து மறைது விடும் உத்தியை கையாண்டிருக்கிறார்.

கன மழையின் நனைந்தபடி டூ வீலரில் வீடு திரும்பும் ஆண்ட்ரியா வண்டி பஞ்சரானதால் ஒரு இடத்தில் ஒதுங்கி நிற்கிறார் . அங்கே ஏற்கெனவே பரதேசி கோலத்தில் நின்றபடி இருக்கும் வசந்த் ரவியைப் பார்த்து. ஆண்ட்ரியா மிரள அதற்கு வசந்த் ரவி உங்களை ரேப் எல்லாம் செய்ய மாட்டேன் என்று ஆரம்பித்து ’பச்சை’யாக (இது ஓப்பன் டாக்காம்) பேச ஆரம்பித்து படிப் படியாக தன் முந்தைய காதலைப் பற்றி விவரிக்கிறார். இதையெல்லாம் கேட்கும் ஆண்ட்ரியா -கப்பட்டவர் ஒரு குட்டி ஆண் குழந்தைக்கு அம்மாவானாலும் ஹஸ்பண்ட இல்லாத, மாடர்னான ஸ்கர்ட் அணிந்து, ஃப்ரீ பேர்டாக வலம் வரும் யங் மதர். அந்த மழை பேச்சுக் கு பிறகும் தொடரும் சந்திப்புகள் அன்பை-யும் கூடவே காதலையும் வீசுகிறது. அதே சமயம், ஆரம்ப பேராவில் வெண்ணிலா சொல்லி இருந்த நிகழ்வுகள் இருவரையும் புரட்டிப் போடுகின்றன. வசந்த் ரவி திசை மாறிச் செல்கிறார். ஆண்ட்ரியா துயரங்களுடனும், மனச் சுமையுடனும் நாட்களை நகர்த்துகிறார். இதனிடையே வசந்த் ரவியின் முன்னாள் காதலியான – அஞ்சலி ரிட்டர்ன் ஆவதும், இடையில் திசை மாறிச் சென்றவர் தொடரும் பாதை மாறி போன பயணம் எங்கு போய் எப்படி முடிந்தது என்பதுதான் தரமணி ட்ராக்.

நவீன மயமாதல் என்ற பெயரில் வயல் வெளிகளெல்லாம் கான்கிரீட் காடுகள் ஆனதையும் ஐ டி என்னும் கார்ப்பரேட் கலாச்சாரம் எம்,ஜி,ஆர் (சாலையில்) எப்படி புரட்டி போட்டுள்ளது என்பதை உணர்த்த, வயல் வெளிகளில் தாங்கள் வந்து தினசரி இரை தின்று பறந்து திரும்பிய பறவைகள் அந்த வயல்வெளிகளைக் காணாமல் வானுயரக் கட்டடமாகிவிட்ட அந்த இடங்களுக்கே தினசரி பறந்து வந்து ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதை அடிக்கடி காட்டி ரணமூட்டுகிறார்.

மேலும் ‘நீ ஸ்கர்ட் போட்டுருக்க, தம் அடிக்குற… அதனால, நீ என் கூட படுக்க ஓகே சொல்லுவன்னு நெனச்சேன். மத்தபடி, I am harmless flirt’ என மொத்தமாக பெண்களை stereotype செய்யும் மேலதிகாரி கதாபாத்திரம், ‘பர்ணபாஸ் வாக்கு, பைபிள் வாக்கு லே’ என பெருமையாக படம் முழுக்க தன் வீனஸைப் பற்றி பேசும் பர்ணபாஸ் இறுதியில் பிரபு செய்த காரியத்திற்காக அவனை திட்டாமல் நன்றி சொல்வது, ‘நாய்ல என்னடி நல்ல நாய், கெட்ட நாய்? நாம எப்படி பிஸ்கட் போடுறோம்ங்கிறதுல தான் இருக்கு’ என தத்துவம் பேசும் அல்தேயாவின் தோழி, “அவன் நல்லா செஞ்சானா, என்ன விட நல்லா செஞ்சானா, எப்படி இருந்துச்சு” என்று போலீஸ் கமிஷனர் கேடபது, ‘ஆம்பளைங்கள்ல நான் பார்த்த ஒரே நல்லவன் நீ தான், நீ எந்த தப்பும் பண்ணமாட்டே’ என சொல்லும் சௌம்யா, சிறுவன் எழுதும் bitch story, என படம் நெடுக செக்ஸ் மழைய தூவி சென்சாரில் அடல்ஸ் ஒன்லி வாங்கிய ராம் கொஞ்சம் எல்லை மீறி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சினிமா பொழுது போக்கையும், சமூக அவலத்தையும், நடப்பையும் காட்டுவதுதான் என்றாலும் எல்லா கெட்டதையும் கடைசியில் நல்லது அழித்து விட்டது என்று காட்டும் மரபை எல்லாம் நரகல் ரேஞ்சிற்கு துடைத்து போட்டு விட்டார் ராம். இத்தனை விஷயங்களில் பெரும்பாலும் அந்த சிறுவன் ஏட்ரியன் பல சம்பவங்களில் பார்வையாளனாக இருப்பது பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

ஹீரோயினான அல்தேயா கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்க வில்லை வாழ்ந்திருக்கிறார், எல்ல காட்சிகளையும் கொஞ்சம் சிரமப்படாமல் அநாயசமாக நடித்து பிரமிக்க வைக்கிறார். அறிமுக நாயகன் வசந்த்ரவி, பிரபு கதாபாத்திரத்திற்கு ஓ.கே-தான் என்றாலும் அவ்வப்போது தன் நடிப்பை மிகைப் படுத்தி வெறுப்பேற்றுகிறார். அஞ்சலி கொஞ்சூண்டு வந்தாலும் டச்சிங்., தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆஹா. ஓ ஹோ.. பேஷ். பேஷ்.. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் பட ஓட்டம் சீராக அமைய சிறப்பாக பங்களித்துள்ளது. நா.முத்துக்குமாரின் வரிகளும், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பால் அதீத கவனத்தை ஈர்க்கிறது.

மொத்ததில் சேரி என்பது மண் குடிசை பகுதியை மட்டும் குறிப்பதல்ல என்பதை வானுயந்த பில்டிங் குடியிருப்புவாசிகள் மூலம் உணர்த்தியிருப்பதில் ஜெயித்து இருக்கிறார் தரமணி ராம்!

மார்க் 5 / 3.25