October 21, 2021

மே மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தலுக்கான அறிவிப்பு!?

இதோ.. அதோ.. எதோ என்று ஏனோதானாவான காரணங்களால் தள்ளிப் போய் கொண்டே இருக்கும் தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மே மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின், தமிழ் நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகள் தடைப்பட்டுள்ளன.

அதனால்  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.

அதேசமயம் தேர்தல் ஆணையம் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தது.

அதில், புதிய வாக்காளர் பெயர்களை சேர்க்க வேண்டியுள்ளது . அதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது.

மேலும் முழு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை முடித்த பிறகு மே இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே தங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யவும் தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.