November 28, 2021

தமிழகம் மற்றும் நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு!

நீண்ட காலமாக தொடரும் நதிநீர் விவகாரங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதாவது 2004 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய கேரளா முதல்வர் உமன்சாண்டியை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், மீண்டும் இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை பேசி தீர்க்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு காலை புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பரம்பிகுளம்-ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்கள் குறித்து பினராயி விஜயனுடன் பேச இருப்பதாகவும், இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்தார். அப்போது மலர் கொத்தும், சால்வையும் போர்த்தி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து இருதரப்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கேரளா மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு ஆகியோர்கலந்து கொண்டனர்.

கேரளா சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, மின்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு, தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் இரு மாநில முதல் அமைச்சர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

பினராய் விஜயன், “இரு மாநில நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். ஒரு வாரத்திற்குள் இந்த குழு அமைக்கப்படும். 6 மாதங்களுக்கு ஒருமுறை இரு மாநில தலைமைச்செயலாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். நதி நீர் பிரச்சினைகளுக்கு நல்ல முறையில் தீர்வு காணப்படும்” என கூறினார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகமும், கேரளாவும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. பரம்பிக்குளம், ஆழியாறு நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக 2 மாநிலங்களிலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்படாதவாறு நீரை பங்கீட குழு அமைக்கப்பட உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இரு மாநிலமும் முடிவு செய்து உள்ளன” என தெரிவித்தார்.