April 12, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!- முழு விபரம்!

மிழ்நாட்டில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 20 நாளாக தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் விரைவுபடுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளில் 51% 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். சுமார் 7,000 பேர் இவர்களில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். கடந்த ஆண்டு இவர்கள் வெளியில் வராமல் பாதிப்பு ஏற்படாத காரணத்தினால் இந்த முறை அதிக பாதிப்பு ஏற்படலாம் என்றும் , ஊரடங்கு இல்லாத சூழலில் தொடர்ந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதால் இந்த வயது பிரிவினரில் பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது.

இதை அடுத்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிருபர்களிடம், “ கொரோனா பாதிக்கப்பட்டவரும், கொரோனா பாதிக்கப்படாதவரும் முகக்கவசம் அணிந்து கொண்டாலே கொரோனா பரவாது. முன்களப்பணியாளர்கள் போர்வீரர்களை போல மக்களை காத்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் பிரசார கூட்டம் நடத்துபவர்கள், அதில் பங்கேற்பவர்களை கட்டாயம் முககவசம் அணிந்து வர செய்ய வேண்டும். அந்த பொறுப்பை அரசியல் கூட்டங்களை நடத்துபவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் எங்களுடைய பணி சுமை குறையும்.

தற்போது கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் ஆகிய இடங்களிலும், மயிலாப்பூரில் கலாசார நிகழ்ச்சிகளிலும் கூட்டம் கூடுகிறது. இப்படி கூட்டம் கூடுவதாலும் ஒருவருக்கு ஒருவர் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருப்பதாலும் கொரோனா எளிதாக பரவுகிறது. இதன் மூலம் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே பிரசாரம், குடும்ப நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். கொரோனா உருமாறி இருக்கிறது. ஆனால் அது பரவுவதில் எந்த மாற்றமும் இல்லை. நாம்தான் முககவசம் அணியாமல் மாறி வருகிறோம். இன்று 674 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாறி உள்ளன” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும் கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.