October 27, 2021

தமிழக அரசு கேபிள் டிவி உரிமம் கேன்சல் ஆகப் போகுது!

இந்திய அளவில் இரும்பு மனுஷியாக இருந்த ஜெயலலிதாவின் விடாமுயற்சியால் நம் மாநிலத்துக்கென விசேஷமாக கிடைத்த  தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அனுமதி கோரி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..

‘ஜெயலலிதாவின் விடாமுயற்சிகளின் காரணமாகவும், தமிழக அரசு எடுத்த பல்வேறு தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், தமிழகத்தில் உருவான ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம் 300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. கொஞ்சம் விளக்கமாக சொல்வதென்றால்
2011-ல் முதல்வர் பதவியேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு கேபிள் டிவி நிறுவனத்தை மீட்டெடுத்து ‘தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன்’ என்று பெயர் மாற்றினார். அதன் மூலம் மாதம் 70 ரூபாய்க்கு 100 சேனல்கள் வழங்கப்பட்டன. இந்தியாவிலேயே மிக குறைந்த விலைக்கு கேபிள் டிவி வழங்கும் மாநிலமாக மாறியது தமிழகம். 2011-ல் 5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2016 ல் தமிழகம் முழுவதும் 70.52 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசின் தகவல் மற்றும் ஓளிபரப்புத்துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனதிற்கு 17.4.2017 அன்று டிஜிட்டல் உரிமம் (DAS) வழங்கியது. இந்தியாவிலேயே மாநில அரசின் நிறுவனதிற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். அதன்படி, சென்னை நூங்கம்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை MPEG2 தொழில்நூட்பத்திலிருந்து MPEG4 தொழில்நூட்பத்திற்கு 01.09.2017 அன்று மாற்றபட்டது. அனலாக் முறையை பயன்படுத்தி வந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் முறைக்கு மாறியது தனியார் டி.டி.ஹச் நிறுவனங்களுக்கு நெருக்கடி தான். 125 ரூபாய்க்கு 180 சேனல்களை வழங்குகிறது. தனியார் நிறுவனங்களுடன் ஓப்பிடும் போது இது மிக மிகக் குறைவு.

இதுபோல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தவில்லை. அதே சமயம், தமிழகத்தின் கேபிள் டிவி செயல்பாடுகளை கண்டு வியந்த ஆந்திரா, ஒடிஸா உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் அதை தொடங்க அனுமதி கேட்டு வந்தன. ஆனால் யாருக்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கடைசியாக இப்போது கேபிள் டிவி நடத்த மத்திய அரசிடம் தெலங்கானா மாநில அரசு உரிமம் கோரி உள்ளது. இந்நிலையில், தெலங்கானா அரசுக்கு அனுமதி வழங்காமல், தமிழக அரசின் கேபிள் டிவியின் உரிமத்தையும் ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரத்தினர்,“தமிழகத்தைப் போல கேபிள் டிவி உரிமம் வழங்கப் பட வில்லை என்றால் மற்ற மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது. இப்போது தமிழகத்தின் அரசியல் சூழலும் மாறி வருவதால், டிராய் பரிந்துரையை காரணம் காட்டி உரிமத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இது அரசியல் ரீதியான முக்கிய முடிவு என்பதால், அதற்கான அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்” என்றனர்.

இத்தனைக்கும் கடந்த மார்ச் 26-ல் தமிழக அரசு கேபிள் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு நாளில் நேரம் கேட்டு செய்தி ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அத்துடன், தமிழக அரசு கேபிள், அதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக தனக்கு வந்த புகாரையும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் முன்வைக்க உள்ளது. சமீபத்தில் தந்தி டிவியில் தமிழக அரசு விரும்பாத செய்தி ஒளிபரப்பப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதன் காரணமாக தந்தி டிவியின் ஒளிபரப்பு, அரசு கேபிளில் நிறுத்தப்பட்டது. தற்போது ஜெயா பிளஸ் அரசு கேபிளிலிருந்து நீக்கியது குறித்தும் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு கேபிளை ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் அலுவலகமே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 12, 2014-ல் டிராய் அளித்த பரிந்துரையில் “அரசியல் அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் மற்றும் பொது நிதியில் செயல்படும் அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கேபிள் டிவி நடத்தும் உரிமம் வழங்கக் கூடாது. ஒருவேளை ஏற்கெனவே உரிமம் வழங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும்” எனக் தெரிவிக்கப்பட்டிருந்ததாக்கும்.