96 ஆண்டு காலம் வெளி வந்த தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம்!

96 ஆண்டு காலம் வெளி வந்த தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம்!

மலேசியாவில் 96 ஆண்டு காலம் வெளி வந்து பல தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகி இருந்த  தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் ஓட்டத்தை நேற்றுடன் நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே விசேஷமாக வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு, 95 ஆண்டு காலம்,4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது. இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் வேள்பாரி சாமுவேலு, “சர்வதேச அளவில் உள்ள எல்லா அச்சு ஊடகத்துக்கும் ஏற்பட்ட நிலைமைதான் தமிழ் நேசனுக்கு நேர்ந்துள்ளது. இணைய ஊடகங்கள் அதிகரித்து வருவதால் பத்திரிகையை வாங்கிப் படிப்போர் குறைந்து கொண்டே போகிறது. மேலும் வருவாயும் குறைந்து கொண்டே போனது. மிகக் குறைந்த பணத்துக்கு விளம்பரங்களைப் பிரசுரிக்க மலேசிய நண்பன், மக்கள் ஓசை, மலர் போன்ற நாளிதழ்கள் வந்து விட்டன.அது மட்டுமில்லாமல் எங்கள் தமிழ் நேசனில் தொழிலாளர் சங்கம் இருப்பதால் மற்ற நிறுவனங்களை விட செலவு அதிகம்.. அதை சமாளிக்க வழியில்லை. அதனால் மூடுகிறோம்” என்றார்.

முன்னதாக கடந்த வாரம் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தத்திற்கான உறுதி கடிதம் வழங்கப் பட்டது. இம்மாதம் இறுதியில் தமிழ்நேசன் நாளிதழ் நிறுத்தப்படும் என கருதப்படுவதோடு அவர்களுக்கான ஊதியம் மூன்றாம் மாதம் வரை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நேசன் மிகப் பெரிய நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் பொருளாதார பாதிப்பை அந்நிறுவனம் எதிர்நோக்கியுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இதன் காரணமாகவே தமிழ் நேசனின் நிர்வாகம் ஊடகத் துறையில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளது.

1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் நியூஸ் தந்தி நாளிதழ் தென்னாசியாவிலேயே பழமை வாய்ந்த நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது 2024 நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் அந்நாளிதழ் 96ம் ஆண்டு தனது பணியை நிறுத்திக் கொண்டிருப்பது தமிழ் வாசகர்களிடையே மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

error: Content is protected !!