தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – நவம்பர் 1 முதல் அமல்!

தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – நவம்பர் 1 முதல் அமல்!
பிரதமர்  நரேந்திர மோடிக்கு  தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு   மற்றும் இந்தாண்டு தொடக்கத்தில் எழுதிய  கடிதங்களில், “கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகம் பொது விநியோக திட்டத்தை , மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. கடந்த 24-8-2013 அன்று, முன்னாள் பிரதமருக்கு, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளேன்.
food oct 28
ஆனால், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்த சட்டத்தை நிறைவேற்றிய போது அந்த குறைகள் எல்லாம் சரிசெய்யவில்லை. அந்த யோசனைகளை மீண்டும் கடந்த 3-6-2014 மற்றும் 7-8-2015 ஆகிய தேதிகளில் தங்களுக்கும் மனு மூலம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த காலக் கெடுவையும், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை கண்டறிய காலக் கெடுவையும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.எனவே, இந்த திட்டத்திற்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்புச் சட்டம் அமையக் கூடாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் நிதி   அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் அமல் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்ட போதும் தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்திற்கு பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்தில் 1.11.2016 முதல் அமல் படுத்தப்படுகிறது

•  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆணையின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உறுதியாக உள்ளது.

• மத்திய அரசு,  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்துமாறும், அவ்வாறு அமல்படுத்தத் தவறினால் தற்போது வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கென வழங்கப்படும் அரிசியின் விலையினை கிலோ ஒன்றுக்கு ரூ.8.30 என்பதிற்கு பதிலாக  ரூ.22.54 என்ற விலையில் மட்டுமே வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளது.

• தற்பொழுது பொது விநியோகத் திட்டத்திற்கான மாதாந்திர தேவை சுமார் 3.23 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஆகும்.  ஆனால், மத்திய அரசு மாதாந்திர ஒதுக்கீடாக 2.96 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கி வருகிறது.  கூடுதலாக தேவைப்படும் 27,969 மெட்ரிக் டன் அரிசி  ஜுலை 2016 முதல் வழங்கப்படவில்லை

• இதற்காக தமிழக அரசுக்கு வருடாந்திர விநியோக அளவான 38.93 இலட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கு வருடாந்திர செலவு ரூ.2,393.30 கோடி ஆகும்.

• முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் “அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு” ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவை குறைக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தார்கள்.

• மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அப்படியே நடைமுறைப்படுத்தும் போது, தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 50.55 ரூ மக்கள் மட்டுமே அரிசி பெற தகுதி உடையவர்களாக இருப்பர்.

• மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.

• மத்திய அரசு, வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள ஒதுக்கீட்டு கொள்முதல் விலையினை 1.11.2016 முதல் மாற்றி அமைத்துள்ளதால், தமிழ்நாடு அரசிற்கு தற்போது ஏற்படும் செலவினத் தொகையான ரூ.2,393.30 கோடிக்கு மேல் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.2,730.95 கோடி செலவினம் ஏற்படும்.

• தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தமிழகத்திற்கு ஏற்பட உள்ள பாதகங்களை நன்கு உணர்ந்து, மத்திய அரசின் சட்டம் எவ்வாறாக இருந்தாலும்,  தமிழக மக்களின் நலனே எந்நலன் என்று வாழும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழக மக்களின் நலன் கருதி, தமிழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள “அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான” அரிசி ஒதுக்கீடு தொடர்ந்து குறைவேதுமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கியதன் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 1.11.2016 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

2. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தும் போதும்,  தற்போது தமிழ்நாடுஅரசால் பாகுபாடின்றி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்

3. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இருந்தால், மாதம் ஒன்றுக்கு 5 கிலோ மட்டுமே வழங்க இயலும்.  ஆனாலும், தமிழக அரசு தற்போது ஒரு நபர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு தற்போது மாதம் ஒன்றுக்கு 12 கிலோ அளவில் வழங்கப்பட்டு வரும் அரிசியினை தமிழக அரசு தொடர்ந்து வழங்கும்.

4. ஒரு குடும்பத்தில் இரண்டு நபர்கள் இருந்தால் மேற்படி சட்டத்தின்படி மாதம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும் என்ற போதிலும், தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் 16 கிலோ அரிசியே தொடர்ந்து வழங்கப்படும்.

5. மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று தற்போது நடைமுறையில் உள்ள உச்சவரம்பின்றி ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ வீதம் உச்சவரம்பின்றி வழங்கப்படும்.

(உதாரணமாக 5 உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 20 கிலோ அரிசி என்பதற்கு பதிலாக இனிமேல் 25 கிலோ அரிசி வழங்கப்படும்.  அதே போல ஒரு குடும்பத்தினர்கள் 7 உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு 35 கிலோ அரிசியும், 10 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 50 கிலோ அரிசியும் வழங்கப்படும்)

6. அந்தியோதியோ அன்னயோஜனா திட்டப் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும்.

7. மேற்படி சட்டத்தை செயல்படுத்துவதாலும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவதாலும், தமிழக அரசிற்கு வருடத்திற்கு சுமார் ரூ.1,193.30 கோடி கூடுதல் செலவாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.  இதனால் அரசிற்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டாலும்,  அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் தொடர்ந்து பயன்பெறும் வகையில் இச்சட்டம் செயல்படுத்தப்படும்.  தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட ஆணையிடப்பட்டுள்ள இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறப்பான திட்டமாக இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல்படுத்தப்படாத ஒரு சிறப்பான திட்டமாக அமையும்.

இவ்வாறு தமிழக அரசின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!