September 25, 2021

நம்ம தமிழ்நாட்டு ’மஞ்ச நோட்டீஸ்’ அறிவிப்பு! – விரிவான ரிப்போர்ட்

இந்தியாவைப் பொறுத்தவரை மானாவாரி விவசாயமும், பாசன விவசாயமும் மழையை நம்பியே உள்ளன. எனவே மழைப் பொழிவானது ஒரு பருவத்தில் குறையும் போது இந்தியா வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்கிறது. 2050ஆம் ஆண்டினை நெருங்கும் போது வறட்சியின் பாதிப்பால் மட்டுமே தெற்காசிய நாடுகளின் விளைச்சல் 30% வரை பாதிக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில், 11 மாநிலங்களில் 278 மாவட்டங்கள் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. நம்நாட்டில் மொத்த விவசாயப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு விவசாயப் பரப்பு வறட்சியால் பாதிப்படைகிறது. அதோடு நம்நாட்டில் உள்ள மொத்த விளை நிலங்களில் 52% மானாவாரி நிலங்களாகும். நமது மொத்த விவசாய உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 44% ஆகும்.

cm jan 11

அதிலும் நம்   தமிழகத்தில் வறட்சி பழங்காலம் தொட்டே நிலவி வந்துள்ளது. பாண்டிய மன்னர் காலத்தில் தொடர்ந்து 12 வருடங்கள் வறட்சி நிலவியதற்கான குறிப்புக்களை தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ்நாட்டில் வறட்சியை நான்கு முக்கிய காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவை

1. மழையளவு

2. நிலத்தடி நீர்

3. நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு மற்றும்

4. பயிர்களின் நிலை.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களில் பாதிக்கு மேல் உள்ள மாவட்டங்கள் பெரும்பாலும் வறட்சியைச் சந்திக்கின்றன. தென்மேற்கு பருவ மழை இயல்பான அளவிற்கு பெய்யாமல் குறையும் போது தென்மேற்கு பருவ மழை காலத்திலும் கோடை காலத்திலும் வறட்சி ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழையளவு 930 மில்லி மீட்டர் ஆகும். சராசரியாக இந்த மழை அளவானது 45 மழை நாட்களில் பெய்கிறது. இதில் பாதியளவு 15 நாட்களில் பெய்துவிடும்.

 வறட்சிக்கான காரணங்கள்

மழை பொய்த்துப் போவது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி காலியாக்குவது, நீர்த்தேக்கங்களில் நீரின்மை, தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்வது போன்றவையே தமிழ்நாட்டில் வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாகும்.

இவைமட்டுமின்றி, நீர்ப்பிடிப்புத் தன்மை குறைந்த மண் வகைகளும் வறட்சியை அதிகரிக்கின்றன. தமிழ் நாட்டில் செம்மண், கரிசல் மற்றும் வண்டல் மண் வகைகளே அதிகம். மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மணல்சாரி மண்வகை நிலங்கள் தொடர் வறட்சிக்கு இலக்காகின்றன. பல மாவட்டங்களில் பரவலாகக் காணப்படும் செம்மண் நிலங்களின் நீர்ப்பிடிப்புத் திறனும் குறைவுதான். இப்படியாக மண்வகையும் தமிழ்நாட்டின் வறட்சிக்கு முக்கிய காரணமாகும்.

 வறட்சியின் விளைவுகள்

1980ல் வடகிழக்குப் பருவ மழை பொய்த்துவிட்டதால், கடுமையான வறட்சியால் சுமார் 2.50 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்தன. குடிதண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விவசாயமும், நெசவுத் தொழிலும் பாதிப்படைந்தன.

1982ல் ஏற்பட்ட கடும் வறட்சியால் நெல் மற்றும் நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. மழை வளம் மிகுந்த நீலகிரிப் பகுதியில் 15000 ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் காய்ந்து போயின.

1983ல் ஏற்பட்ட வறட்சியால் நெல், பயறுவகை மற்றும் சிறுதானியப் பயிர் விளைச்சல் பாதிப்படைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், மின் உற்பத்தி பாதிப்படைந்தது.

1985ல் ஏற்பட்ட வறட்சியால் கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை பூதாகரமானது. இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் இரண்டு மீட்டர் அளவு குறைந்து போனது.

1987, 1989ல் ஏற்பட்ட வறட்சியால் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் இயல்பான அளவைவிட 11 மீட்டர் குறைந்தது.

 இந்நிலையில் தற்போதும்  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் எதிரொலியாக அனைத்து அணைகள், ஏரி, குளம், வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. கர்நாடக அரசும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. இதனால் டெல்டா பகுதிகள் பாலைவனமானது. பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது.

இதனால் விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் என்பது கடந்த சில வாரங்களாக தினசரி நிகழ்வாகி வருகிறது. இதுவரை சுமார் 190க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி, பயிர்களுக்கு நஷ்டஈடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசியல் கட்சிகள், விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து விவசாயிகளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இப்படி ஆய்வு செய்த அறிக்கையை, அமைச்சர்கள், அதிகாரிகள் தமிழக அரசிடம் நேற்று அளித்தனர். அவர்களின் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:  குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் விரிவான ஆலோசனை நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் .இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட 3,028 கோடி ரூபாய் பயிர் கடன், மத்தியக் காலக் கடனாக மாற்றியமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.இதற்கான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

33 சதவீதத்தற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000, நீண்டகால பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7287 ரூபாயும் முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.முழு பயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் விவசாயிகள் மாவட்டத்தை பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 21,500 ரூபாய் முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற இயலும் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.