November 27, 2022

தூங்காநகர மக்களே.. நல்லா இருக்கீங்களா? – மதுரையில் மோடி பேச்சு முழு விபரம்!

“மதுரை நகரம் தூங்கா நகரம். இந்த நகரம் எப்போதும் தூங்கியதே இல்லை. விழித்திருக்கும் நகரம் இது. இந்த நகரம் அரசியல் யதார்த்தத்திற்காகவும் விழித்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் விஷயத்திலும் மதுரை விழிப்புடன் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அசெம்பளி எலெக்‌னை முன்னிட்டு, அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, வெற்றி வேல்.. வீர வேல் என்ற உரையுடன் தொடங்கினார். மதுரை மக்களே நல்லா இருக்கீங்களா? என்று தமிழில் கேட்ட போது கூடி இருந்த கூட்டம் பலத்த ஆரவாரத்தைக் கிளப்பியது..

மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, “மதுரை வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகளை தரிசித்தேன். நான் ஆசீர்வதிக்க பட்டவனாக உணர்கிறேன். மதுரை புண்ணிய பூமி, வீர பூமி. மிச்சமுள்ள என் வாழ்நாள் முழுவதும் மீனாட்சி கோயிலின் நினைவுகளில் மூழ்கி இருப்பேன். மதுரை, தமிழ் பண்பாட்டின், நாகரிகத்தின் தொட்டில். சங்கம் வளர்த்த மதுரை, ஞானம் வளர்த்த மதுரை, தமிழ் வளர்க்க வரும் அனைவரையும் பாராட்டுகிறேன்.

சௌராஷ்டிரா, தெலுங்கு சமூக மக்கள் அதிகம் உள்ளனர். ஒரே நாடு பெருமை மிகு நாடு என்பதன் அடையாளமாக மதுரையை பார்க்கிறேன். தென் தமிழகம் எம். ஜி.ஆருடன் தொடர்பு கொண்டது. மதுரை வீரன் படத்தை யாராவது மறக்க முடியுமா? அந்த படத்தில் பாடல் பாடிய சவுந்தர்ராஜனை மறக்க முடியாது. மதுரை மக்கள் எம்.ஜி.ஆருக்கு பின்னால் வலிமையான பாறை போல இருந்துள்ளார். எம்.ஜி.ஆர். தென் தமிழகத்தில் இருந்து 3 முறை வென்றுள்ளார். தென் தமிழக மக்கள் மீது எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பார்வை ஊக்கமும் உற்சாகமும் அளிக்க கூடியவை.

130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நீர் பாசனம், சாலை உள்ளிட்ட உள் கட்டுமான வசதிகளுக்கு அதிகமாக செலவிடப்பட்ட உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் நிறைய திட்டங்கள் அளிக்கப்படும். நாடு முழுவதும் வைஃபை சேவை விரைவில் அளிக்கப்படும்.

சுந்தரேஸ்வரர் திருவிளையாடல் நடந்த மண் மதுரை.நீருடன் உள்ள தொடர்பை திருவிளையாடல் மற்றும் மதுரை உணர்த்துகிறது. அதற்காகவே தண்ணீர் மேலாண்மையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு உள்ளன. மத்திய மாநில அரசுகள் இணைந்து 24 மணி நேரமும் தடையில்லா தண்ணீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையில் வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஒடும். எங்களை வெற்றி பெற செய்தால், மிக அதிகமான திட்டங்கள் வரும் என்று அர்த்தம். விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வர்த்தகத்தை சுலபமாக மாற்ற பல சீர் திருத்தங்களைச் செய்து வருகிறோம். வரி என்கிற பெயரில் வரி கொடுமை இருக்க கூடாது என்பதால் வரி சுமையை குறைத்து கொண்டிருக்கிறோம்.

அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 7 ஜவுளி பூங்கா வர உள்ளன. திமுக, காங்கிரஸ்க்கு பேசுவதற்கு சரியான திட்டம் இல்லை. அவர்கள் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்தின் பாதுகாவலர்களாக சித்தரித்து கொள்கிறார்கள். அது உண்மை அல்ல. பெண்களை அவமானப் படுத்தும் வேலைகளை செய்கிறார்கள் திமுக, காங்கிரஸ் கட்சியினர், அதற்கு நான் ஆச்சரியம் அடைய மாட்டேன். ஏனெனில் அது அவர்களுடைய குணம்.

ஜல்லிக்கட்டு தடை செய்யும் நடவடிக்கை 2011 இல் செய்தது காங்கிரஸ் அரசு. 2016 தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டை தடை செய்வோம் என காங்கிரஸ் சொல்லியுள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என அதிமுக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு நான் உடனே அனுமதி அளித்தேன்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ், திமுக நினைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தது பாஜக அரசு. எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரும். சரியான நடைமுறையில் உறுதியாக வரும். மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் தமிழ் மொழியில் படிக்கும் வசதியை அமல் படுத்தி உள்ளோம்.

தேவேந்திர குல வேளாளர் விவகாரத்தில் திமுக, காங் பொய் சொல்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்கள் கண்ணியத்தை மீட்ட கட்சிகள் அதிமுக, பாஜக. திமுகவும், காங்கிரஸ் கட்சிகளால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. மதுரையை வன்முறை நகரமாக மாற்ற முயற்சித்தார்கள் திமுகவினர். பெண்களின் சக்தியை எப்படி மதிக்க வேண்டி என்பதை சொல்லும் நகரம் மதுரை. மீனாட்சி, கண்ணகி, ராணி மங்கம்மாள் ஆகியோரை போற்றிய ஊர் மதுரை.

மதுரை தூங்கா நகரம் என புகழ்பெற்ற நகரம். இந்த மதுரை அரசியல் முக்கியத்துவத்தைக் கொடுப்பதிலும் தூங்காத நகரம், அது அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதில் கூட தூங்காமல் இருக்கும் என நம்புகிறேன்.” என்று கூறினார்.