September 20, 2021

கேரளா கொடுக்க முன் வந்த குடிநீரை வேண்டாம் என்று சொன்னது எடப்பாடி அரசு!

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் குடிநீருக்கும் பிற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். ஆனால் பருவமழை பொய்த்து விட்டதால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், தற்போதைய தண்ணீர் பிரச்சினையைப் போக்குவதற்காக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தண்ணீர் பிரச்சினை இருப்பது போன்று தவறான தகவல் பரப்பப்படுவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்ததற்கும், எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையைப் பெரிதாக்கி ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என முதல்வர் பேசியதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நம் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் அவதிப்படுவதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில் மூலம் அனுப்ப தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு இன்று வியாழக்கிழமை கேரள அரசு செய்தி அனுப்பியது, அந்த செய்தி கிடைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, “இப்பொழுது கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்ப வேண்டியது இல்லை” என பதில் அனுப்பப்பட்டுள்ளதாம். தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இந்தச் செய்தி கேரள அரசு தலைமைச் செயலகத்துக்கு கிடைத்து இருப்பதாக கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளது.

இறைவனின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்துக்கும் இதுவரை கிடைத்த தென்மேற்கு பருவமழை மிகக்குறைவாக உள்ளது. ஆனாலும் தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்க கேரள அரசு முன்வந்தது. ஆனால் தமிழக அரசு என்ன காரணத்தினாலோ ரயில் மூலம் அனுப்பப்படும் குடிநீரை இப்பொழுது வேண்டாம் என கேரள மாநிலத்துக்கு மீண்டும் தகவல் அனுப்பி உள்ளது.

ஆனாலும் தமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக நாளை அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி கூட்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
கேரள அரசு தமிழகத்துக்கு குடிநீர் வழங்க முன்வந்த செய்தி குறித்து அமைச்சரவைக்கு தெரிவிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி புதிய முடிவு எடுக்கக்கூடும் என்றும் தகவல் வருகிறது.