January 26, 2022

ஒரு வழியாக ராஜேந்திர பாலாஜி கைது! – வீடியோ

மிழக அரசில் வேலை வாங்கி தருவதாக தொடர்பான பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் இன்று (5-1-2022) கைது செய்தனர்.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து. ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டனர். மேலும் சைபர் கிரைம் போலீசார் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செல்போன் எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணனை கைது செய்தது தனிப்படை. ராஜேந்திர பாலாஜிக்கு கார் ஓட்டிவந்த பாஜக பிர்முகர் நாகேஷ் என்பவரும் கைது என்றும் தகவல் வருகிறது. அத்துடன் ராஜேந்திர பாலாஜிக்கு இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதவியதாக முதல்கட்ட விசாரணையில் தகவலும் கசிகிறது.