September 27, 2022

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்கு வித்திடுமோ?

தமிழகம் எதிர்பாராத அரசியல் குழப்பத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. நிர்வாக இயந்திரம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு ஏற்ற வலுவான ஆட்சி தமிழகத்தில் இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தாய்மார்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அடிமனதில் உருவாகி விட்டது. “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசும் இல்லை” அல்லது அந்த அரசு கலைந்து ஓர் “ஆளுநர் ஆட்சியும் இல்லை” என்ற நிலையில் தமிழகத்தின் அரசியல் திரிசங்கு நிலையில் நின்று கொண்டிருக்கிறது.

edit apr 8

இந்திய மாநிலங்களில் சிறப்புமிக்க மாநிலமாகவும் வளம் மிக்க மாநிலமாகவும் இருந்த தமிழகம் இன்றைக்கு அரசியல் சூறாவளியில் மாட்டிக் கொண்டு அகில இந்திய அளவில் அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைஞர் கருணாநிதி உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். செயற்பாட்டு அரசியலில் அவர் இடம்பெறவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜெயலலிதா மறைந்து விட்டார். அந்தக் கட்சி மூன்று நான்கு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கிறது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அரசியல் ரீதியாகத் தேர்தலில் வெற்றி பெறும் செல்வாக்கை இழந்து நிற்கிறார்.

திராவிட இயக்கம் என்று கூறும் இந்த மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களால் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்றைக்கு தமிழகத்தில் வலுவான அரசியல் தலைமைக்கு மக்கள் ஏங்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இப்போது செயல் தலைவராகியிருக்கும் ஸ்டாலின் எதிர்கால நம்பிக்கையூட்டும் தலைவராக அதற்கு ஏற்ற வாக்கு வங்கியுடன் எஞ்சியிருக்கிறார். என்றாலும், தி.மு.க மீதான தொன்று தொட்ட எதிர்ப்பில் இருக்கும் பிற கட்சிகள் அந்தத் தலைமையின் கீழ் ஒன்று சேர இன்னமும் கூட தயங்கும் நிலை இருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் “தமிழகத்தில் நடக்கும் மோசமான ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் தி.மு.க வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்” என்ற ஸ்டாலினின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதன் பின்னனி இதுதான் என்றால் மிகையாகாது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்ற இரு கட்சிகளில் அ.தி.மு.க எத்தனையாகச் சிதறுண்டாலும், அதில் ஒரு தலைமையின் கீழ் ஒன்று சேரலாம். ஆனால், தி.மு.கவின் தலைமையின் கீழ் அணி சேரக் கூடாது என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கூட ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து போலிருக்கிறது. மாநிலத்தில் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் போட்டியாக உருவான பா.ம.க, ம.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ், தே.மு.தி.க, ஆகிய கட்சிகள் அனைத்துமே தனியாகச் சாதிக்க முடியாது. என்றாலும், அரசியல் மாற்றத்தை கொண்டு வரநினைக்கும் அ.தி.மு.க அல்லது தி.மு.கவின் முயற்சியை முறியடிக்க முடியும் என்ற சிந்தனையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளைத் தவிர, மாற்று அரசியலைக் கொடுப்பதற்கு வேறு கட்சிகளுக்கு வாக்குவங்கி பலம் இல்லை. அந்த மாற்று அரசியலைக் கொடுக்க தேசிய அளவில் உள்ள காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் தமிழகத்தில் பலமில்லை. அதனால், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் நிலைமை எப்படியோ போகட்டம் என்றே மத்தியில் உள்ள பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் நினைப்பது போல் தெரிகிறது. அதனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானதற்கும் பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது. பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதற்கும் ஆதரவு தெரிவித்தது. இனி ஆர்.கே. நகர் தேர்தலுக்கு பிறகு ஒரு முதல்வர் மாற்றம் அ.தி.மு.கவுக்குள் வந்தால் அதற்கும் பா.ஜ.க ஆதரவு கொடுக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மத்திய அரசின் தயவு இல்லாமல் அ.தி.மு.கவுக்குள் உள்ள எந்த அணியும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால், அந்த மூன்று அணிகளுமே பா.ஜ.கவை விமர்சிக்கத் தயக்கம் காட்டுகின்றன. மக்கள் எதிர்ப்பை மீறி ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் வந்தாலும் சரி, ‘நியூட்ரினோ’ திட்டம் வந்தாலும் சரி, வறட்சி நிவாரணம் தரவில்லை என்றாலும் சரி மத்திய அரசிடம் வலுவான கோரிக்கையை வைத்து, அதற்கு நிவாரணம் தேட முடியாமல் திண்டாடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி விட்டாலும், அதற்காக மத்தியில் உள்ள பா.ஜ.கவை விமர்சிக்கப் பயப்படும் டி.டி.வி. தினகரன் “ஓ.பி.எஸ் – ஸ்டாலின் கூட்டணி” இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி விட்டது என்று, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பிரசாரம் செய்கிறார். ஸ்டாலினுக்கும்- மத்திய அரசுக்கும் நல்லுறவு இல்லை. அந்த அரசுக்கு அவர்கள் ஆதரவும் தரவில்லை. இருந்தாலும் ஓ.பி.எஸ் – பா.ஜ.க உறவால் இரட்டை இலைச் சின்னம் போய் விட்டது என்று பிரசாரம் செய்தால் தன் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது அவரது பயமாக இருக்கிறது.

குறிப்பாக, தமிழகத்தில் பல தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் ஆங்கிலம் அழிக்கப்பட்டு, இந்தி எழுத்துக்கள் எழுதப்படுகிறது. தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டு விட்டன. ஆனால், இது பற்றித் தமிழக முதலமைச்சரும் வாய் திறக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வம் அணியும் கருத்துச் சொல்லவில்லை. டி.டி.வி.தினகரன் சார்பிலும் அறிக்கை ஏதும் வரவில்லை. ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு தனியார் கம்பெனிகளுடன் மத்திய அரசு ஒப்பந்தமே போட்ட பிறகும் தமிழக அரசின் சார்பில் அதை எதிர்த்து முதலமைச்சர் இதுவரை அறிக்கை ஏதும் விடவில்லை. “இத்திட்டத்தை மக்கள் விரும்பவில்லை” என்ற கருத்தைக் கூட எடுத்துச் சொல்ல முன் வரவில்லை. அந்த அளவுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க.வைப் பார்த்து அஞ்சும் நிலையில் இருக்கிறார். மாநில அரசால் மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்து நிறைவேற்றிக் கொள்ள இயலாது என்ற சூழ்நிலைதான், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சல்லிக்கட்டு என்றால் மாணவர்கள் போராட்டம். ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் என்றால் கிராம மக்கள் போராடுகிறார்கள். மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மீனவர்கள் போராடுகிறார்கள்.

இன்றைக்கு எல்லாவற்றுக்கும்ட உச்சமாக, தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினையைப் போக்கச் சொல்லி, தமிழக விவசாயிகள் எல்லாம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். டெல்லிக்கு சென்று தமிழக விவசாயிகள் இத்தனை நாள் போராட்டம் நடத்தியது இதுதான் முதல் முறை! மக்களின் பிரச்சினைகளை முறைப்படி மத்தியில் உள்ள அரசிடம் ஆணித்தரமாக எடுத்து வைத்து, சாதிக்க நினைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இப்போது இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதியும் ஆட்சியில் இல்லை. இந்த வெற்றிடம் தமிழகத்தை நாள்தோறும் போராட்டக் களமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை தரும் அரசியல் தலைமை ஆட்சியில் இல்லை என்ற எண்ணம் இதனால் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மாநில நிர்வாகவும் செப்டம்பர் 22 ஆம் திகதிக்குப் பிறகு இதனால் ஸ்தம்பித்து நிற்கிறது. ஆட்சி தலைமை ஸ்திரமாக இருந்தால் மட்டுமே மாநில நிர்வாகம் மக்களுக்கு ஏற்றவகையில் நடைபெறும். ஆனால் அந்த ஆட்சி தலைமையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியிருந்தும் “நிர்வாகம் இல்லை” என்ற நிலையை எட்டி விட்டது.

தமிழக மக்களின் பிரச்சினைகளை விளக்கமாக மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, பிரதமரிடம் மாநிலத்துக்கான சலுகைகளைப் பெறும் சக்தி, மாநிலத்தில் உள்ள ஆட்சித் தலைமைக்கு இல்லை என்ற எண்ணம் ஒவ்வொரு பிரச்சினையிலும் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இது தமிழகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல, என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது. ஆர்.கே. நகர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்தநிலையில் மேலும் மோசமான மாற்றம் நிகழலாம் என்ற அச்சம் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியிலிருக்கும் ‘சசிகலா அணி’ வெற்றி பெற்றாலும், தோற்றாலும் மாநிலத்தின் ஆட்சி தலைமையில் மேலும் நிச்சயமற்ற நிலைமை உருவாகும் என்ற கவலை அனைவருக்கும் பிறந்திருக்கிறது.

இதுபோன்ற நேரத்தில், தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் ஒருவர் இல்லாமல் இருப்பது பெரும் கவலையளிப்பதாக இருக்கிறது. “இந்த ஆட்சி நீடிப்பதற்குப் பதில்” விரைவில் “ஆளுநர் ஆட்சியோ” அல்லது “மறுதேர்தலோ வந்தால்” நல்லது என்ற எண்ணம் கிராம அளவில், மக்கள் மனதில் ஊடுருவி விட்டது. தமிழக அரசியல் வரலாற்றில், இப்போதுள்ள சசிகலா அ.தி.மு.கவின் ஆட்சியின் மீதுள்ள வெறுப்பைப் போல், இதற்கு முன்பு மக்கள் மத்தியில் வேறு எந்த ஆட்சி மீதும் இருந்ததில்லை. தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இதுவரை அதிரடிக் கவனம் ஏதும் செலுத்தவில்லை. அதேபோல் 89 சட்டமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துள்ள தி.மு.க அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த முன்வரவில்லை. கட்சித் தாவல் சட்டத்தின் கெடுபிடி இருப்பதால், “மக்களின் தீர்ப்பைப் பெற்றே ஆட்சி அமைப்போம். கொல்லைப்புற வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம்” என்று திரும்பத் திரும்ப தி.மு.க அறிவித்து வருகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவில் ஏற்படும் குழப்பமாவது தமிழகத்தில் பொதுத் தேர்தலுக்கு வித்திடாதா என்ற ஆதங்கம் தமிழக வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இன்றைக்கு தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் எழுந்துள்ள ஒரே கேள்வி, ஆளுநர் ஆட்சியா? மீண்டும் தேர்தலா? என்பதுதான். அந்தக் கேள்விக்கு ஆர்.கே.நகர் தேர்தல் மூலம் பதில் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் இருக்கிறது. விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று ஸ்திரமான ஆட்சியும், வலுவான அரசியல் தலைமையும் தமிழகத்துக்குக் கிடைப்பதே மாநில நலனுக்கும் தேசிய நலனுக்கும் ஏற்றதாக அமையும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை என்ற கட்டத்துக்கு தமிழக மக்கள் வந்து விட்டார்கள்.

எம். காசிநாதன்