November 29, 2022

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் அதிகாரம்!

மிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின்மீது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்,

“பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய இந்தச் சட்டமுன்வடிவு குறித்து நானும் சில செய்திகளை இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வி அளிப்பதில் இந்தப் பல்கலைக்கழகங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன. இவற்றினுடைய வேந்தராக மாண்புமிகு ஆளுநர் அவர்களும், இணை வேந்தராக மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சரும் செயல்படக்கூடிய நேரத்தில், கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய அரசுக்குப் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கக்கூடிய அதிகாரம் இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மாநில அரசின், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலந்தாலோசித்து ஆளுநர் துணை வேந்தரை நியமிப்பது மரபாக இருந்து வந்துள்ள நிலையில், அண்மைக் காலமாக இந்த நிலையிலே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இச்செயல் மக்களாட்சியினுடைய தத்துவத்திற்கே விரோதமாக இருக்கிறது.

“ஒன்றிய – மாநில அரசு உறவுகள்” குறித்து ஆராய 2007-ல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில், “அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது” என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு பூஞ்சி ஆணையம் சொன்ன காரணங்கள் என்ன தெரியுமா? துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர்களிடம் இருந்தால், அது சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகும். பல்கலைக்கழக கல்வியில் மாநில அரசு இயற்கையிலேயே ஆர்வமாக அக்கறையுடன் இருக்கும் சூழலில், ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரத்தைக் கொடுப்பது மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே அதிகார மோதலுக்கு வித்திடும் என்று தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆங்கிலத்தில் சொல்வதென்றால், “There would be a clash of functions and powers” என்று மிகவும் ரத்தினச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்தப் பரிந்துரையின்மீது, ஒன்றிய அரசால் மாநிலங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் பூஞ்சி ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு, என்னுடைய தலைமையில் அமைந்தவுடன், பூஞ்சி ஆணையப் பரிந்துரைகள் குறித்து மீண்டும் மாநில அரசினுடைய கருத்தைக் கேட்டு, உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதத்திற்கும் “துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை ஏற்க வேண்டும்” என்று இந்த அரசின் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்தபோது, இன்றைக்குப் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படக்கூடிய மூவரில் ஒருவர் துணைவேந்தராக மாநில அரசின் ஒப்புதலோடு வேந்தரால் நியமிக்கப்படுகிறார்.

ஆகவே, இந்த மாநிலங்களில் உள்ளதுபோல, குறிப்பாக, பிரதமருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளதுபோல, தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பல்கலைக்கழகச் சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவினை இங்கே உயர்கல்வித் துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 6-1-2022 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் “துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்” என்று இதே மன்றத்தில் அளிக்கப்பட்ட வா்க்குறுதி இன்று நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தரை நியமிக்கிறது. ஆகவே, இந்தச் சட்டமுன்வடிவை இங்கிருந்து வெளிநடப்பு செய்திருக்கக்கூடிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், “பூஞ்சி ஆணைய” பரிந்துரையை ஏற்கலாம் என 2017-ல் அ.தி.மு.க. ஆட்சியிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே. அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இந்தச் சட்டமுன்வடிவை ஆதரிப்பதில் நெருடல் இருக்க வாய்ப்பே கிடையாது. எல்லாவற்றையும் விட, இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்சினை; மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை” எனத் தெரிவித்துள்ளார்.