June 28, 2022

இ-வேஸ்ட்டால் இயற்கை + மனித வளத்தை இழந்து வரும் தமிழகம்!

எலெக்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்தவரை புதிய புதிய தொழில்நுட்பங்களும், மாடல்களும் அப்கிரேட் செய்யப் பட்டுக் கொண்டே வருகிறது. இதனால் பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை அப்படியே குப்பையாகக் குவிக்கிறோம். அதுதான் இ-கழிவுகளாக மாறுகிறது. உலக அளவில் ஒரு நிமிடத்துக்கு எட்டு டன் எடை அளவுக்கு இ-கழிவுகள் உருவாவதாக இது குறித்த ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வின் படி பார்த்தால், எதிர்காலத்தில் மக்கள் வாழத் தகுதியற்ற, குப்பைகளை கொட்டும் இடமாகவே இந்த பூமி மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுத்து கொண்டேதான் இருக்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள். ஆனாலும் இ-வேஸ்டை உருவாக்குவதில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா… இந்திய அளவில் இரண்டாவது உள்ளது தமிழகம் என்பதுதான் வேதனை…!

நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதையே அனைவரும் விரும்புகிறோம். ஸ்மார்ட் போனில் தொடங்கி, டேப்லெட் என நவீன கேட்ஜெட்களில் நாம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை நேசிக்கவே ஆரம்பித்து விட்டோம் இன்றைய நவீன உலகில் ஒன்றுக்கும் மேற்பட்ட டி.விக்கள், வீடுகளில் உள்ள அனைவருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் என வீடு முழுக்க நவீன கேட்ஜெட்களின் ஆக்கிரமிப்புதான். ஆஅம்.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி, ஏசி போன்றவைகளின் தேவையற்ற, பயனற்ற மற்றும் பழுதான உதிரிபாகங்களை – அதாவது எலக்ட்ரிக்கல்… எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்களின் கழிவுகளைத்தான் இ-வேஸ்ட் என்கிறோம்.

பிளாஸ்டிக் கழிவால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்றால், அதைவிட 60 முதல் 100 சதவீதம் வரை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தீங்கு தரக் கூடிய லெட், கேட்மியம், மெர்குரி போன்ற ரசாய னங்களால் தயாரிக்கப்படுபவை எலக்ட்ரானிக் பொருட்கள்… தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு டன் வரையிலான இ-வேஸ்ட் உருவாவதாகக் கூறப்படுகிறது. அதாவது உலக அளவிலான இ-வேஸ்டில் இந்தியாவின் பங்கு, 4 சதவீதம் ஆகும். இந்தியாவில் மின்னணு கழிவுகள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும், 2.21 லட்சம் டன் அளவிற்கு ‘இ-வேஸ்ட்’ உற்பத்தியாவதாக கூறப்படுகிறது.இவ்வாறு அதிகரித்து வரும் மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கு வளர்ந்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதில் தொழில் வாய்ப்புகள் என்ற பெயரில் தங்கள் நாட்டில் உள்ள கழிவுகளை வளரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் காலங்களில் புவி வெப்ப மயமாவதையும், கடலில் நீர்மட்டம் உயர்வதையும் தடுக்க முடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..

கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் தேவையானவற்றைப் பிரித்தெடுக்க ரசாயனங்களை பயன் படுத்துவதாகவும், காற்றுமாசு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. இ-வேஸ்ட் களை எரித்தாலும், மண்ணில் புதைத்தாலும் 95 சதவீத மாசு ஏற்படும் என்றும், இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தமிழகத்தில் இதுபோன்ற இ-வேஸ்ட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யவும், பாதுகாப்பாக அழிப்பதற்கும் இரண்டு நிறுவனங்கள் இருந்தாலும், இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நினைத்த மாத்திரத்தில் மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்களை வாங்காமல், தேவைக்கு ஏற்ப பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் இ-வேஸ்ட் உருவாவதை கட்டுப்படுத்த முடியும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரவேண்டியது காலத்தின் கட்டாயம்..சீனாவில் கையூ மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு செரிமாண பிரச்சினை, நரம்பு தளர்ச்சி, மூச்சுத் திணறல், எலும்பு பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் இந்தப் பகுதியைச் சுற்றித்தான் மின்னணுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதன் பாதிப்புதான் இந்த மக்களுக்கு ஏற்பட்ட உடல் கோளாறு களுக்குக் காரணம் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அகஸ்தீஸ்வரன்