December 1, 2021

வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்!

த்திய அரசு கொண்டு வந்த மூன்றுவேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதும், அதனை எதிர்த்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்து பேசினார்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாச்சி தத்தவத்திற்கு எதிரானது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானது தான். இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான் நெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. குறைந்தபட்ச ஆதாய விலை என்பது குறைந்த பட்சம் வாய் வார்த்தைக்கு கூட கிடைக்காத சட்டங்கள் தான் இச்சட்டங்கள்” என்றார்.

வேளாண் சட்டத்திருத்த மசோதா மற்றும் சட்டத்திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அப்போது அறிவித்தார்.

மத்திய மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து, டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரும் 7வது மாநிலமாக தமிழகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.