டெல்லியில் போலீஸார் & போலீஸ் பேமிலி திடீர் போராட்டம்- தமிழக ஐபிஎஸ் ஆதரவு!

கடந்த 2ம் தேதி பார்க்கிங் விவகாரம் ஒன்றில் நடந்த கலவரத்தின் போது வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் இன்று போலீசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான போலீசார் கலந்து கொண்ட நிலையில் டெல்லியில் தங்களது உரிமைக்காகப் போராடும் போலீஸாரின் தோளோடு தோள் நிற்போம் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோன்று பிஹார் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல் துறையின ருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. மிகப்பெரிய கலவரமாக மூண்ட இச்சம்பவத்தில் போலீஸார் மீது வழக்கறிஞர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவங்களின் வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதை அடுத்து திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக் கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி ஐகோர்ட் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. டெல்லி ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து ‘வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை’ அமல்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு வெளியே வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழமை நீதிமன்றப் புறக்கணிப்பும் நடைபெற்றது.

இந்நிலையில் டெல்லியில் போலீஸார் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் களுடனான மோதல் விவகாரத்தில் தங்களுக்கு நியாயம் வேண்டும் எனவும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி டெல்லி காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு வெளியே சீருடையுடன் போலீஸார் திடீரென போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் கைகளில் ‘காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு நியாயம் வேண்டும் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் திடீரென போலீஸார் போராட்டத்தில் குதித்ததால் டெல்லி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் வலுவாக நடந்து வருகிறது.

இந்நிலையில் போலீஸாரின் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. போராடும் டெல்லி போலீஸாரின் தோளோடு தோள் நிற்பதாகத் தெரிவித்து உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் வெளியிட்ட ஆதரவுக் கடிதத்தில், டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு சட்டத்தின் மீதுள்ள மரியாதையை மதிக்காத போக்கைக் காட்டுகிறது . இந்த சூழலில் டெல்லியில் போராடும் ஒவ்வொரு காக்கிச் சட்டை காவலர்களின் தோள் கொடுத்து நிற்பதாகவும், சோதனையான இந்த காலகட்டத்தில் சட்டத்தை மீறி நடப்பவர்களை சட்டத்தின் வழி நின்று முறையான நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கள் சங்கம் இந்த மண்ணில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இதேபோன்று பிஹார் ஐபிஎஸ் சங்கமும் டெல்லி போலீஸாரின் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளது.