ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தைப் பொறுத்தவரை டாச்மாக்-கில் மட்டுமின்றி பால் விற்பனையிலும் அரசின் சார்பிலான ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் பால் தரமாகவும், குறைவாக வும் இருப்பதால் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.ஆவின் பால் விலை கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன் பின்னர் 5 வருடமாக பால் விலை உயர்த்தப்படாத நிலையில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பால்களை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் வாடிக்கை யாளர்களும் பெருமளவில் ஆவின் பாலையே விரும்பி வாங்கி வருகின்றன. ஆனால் தீவனங்கள் மற்றும் வைக்கோல் விலை உயர்வாலும், மாடுகளை பராமரிக்க ஆகும் செலவு அதிகமானதாலும் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து எப்போது வேண்டுமானாலும் ஆவின் பால் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 17) அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 ஆக உயர்த்தி ரூ.32ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 ஆகவும் உயர்த்தி ரூ.41 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த விலை உயர்வானது வரும் 19ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.