எனது பேத்திபோல் நினைச்சேன்!- கவர்னர் விளக்கி மன்னிப்பு கோரினார்.

நேற்றைய ராஜ்பவன் பிரஸ்மீட்டில்  செய்தியாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் கன்னத்தைத் தட்டியதற்காகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கமும்  அளித்து மன்னிப்பும் கோரியுள்ளார்.

கல்லூரி கணக்கு டீச்சர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்பை கூட்டினார். அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பன்வாரிலாலிடம் கேள்வி எழுப்பினார். அதனையடுத்து பன்வாரிலால் புரோஹித் அவரது கன்னத்தில் தட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆளுநர் தனது அனுமதி இன்றி தனது கன்னத்தை தட்டியது தவறு என கண்டனம் தெரிவித்து இருந்தார்.இதனையடுத்து பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய பன்வாரிலால் புரோஹித்திற்கு சமூக வலைதளவாசிகள் உட்பட பலர் தங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டியதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக பெண் பத்திரிகையாளருக்கு ஆளுநர் அனுப்பியுள்ள கடிதத்தில், பத்திரிகையாளராக 40 ஆண்டுகால அனுபவம் எனக்கு உண்டு. பேத்தியின் வயதை ஒட்டி இருப்பதால்  திறமையை பாரட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன். திறமையாக கேள்வி கேட்கும் விதத்தை பாராட்டும் விதமாகவே தட்டி கொடுத்தேன். இதனால் உங்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன் என கூறி இருக்கிறார்.