February 8, 2023

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: NIAக்கு மாற்ற முதலமைச்சர் பரிந்துரை!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை, உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டிருந்தார் டிஜிபி சைலேந்திர பாபு. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதிசெய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர். ​இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடவும் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல் துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.