September 29, 2021

நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை! – ரிஜிஸ்ட்ரரார் அறிவிப்பால் கோலிவுட்டில் ஷாக்!

கிட்டத்தட்ட மூவாயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் கொண்ட தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது.இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்டப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும்வரை தேர்தல் குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசியுள்ளார்கள்.

ஆளுநரைச் சந்தித்த பிறகு விஷால் பேட்டியளித்ததாவது: நடிகர் சங்கத் தேர்தல் நியாயமான முறையில் பாதுகாப்புடன் நடக்கவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார். இந்த சந்திப்பை அடுத்து, தேர்தலை நிறுத்தக் கோரிய அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது