March 27, 2023

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களுக்கான அபராதம் ஆறே முக்கால் கோடி – இலங்கை அதிரடி!

இந்தியா-இலங்கை கடல் எல்லை 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையே நடந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுவிட்டது. சர்வதேச சட்டத்தின்படி, இந்த ஒப்பந்தங்களை இருநாடுகளும் மதித்து செயல்பட வேண்டும் என்று விதி ஏற்பட்ட நிலையில் வங்காளவிரிகுடா கடலில் பாக்.ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அத்துமீறி இலங்கை கடலில் மீன்பிடிப்பதாக கூறி அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அதிலும் இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக மீனவர்களை மிரட்டும் வகையில் இலங்கை அரசு சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி இலங்கை கடலில் வெளிநாட்டினர் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தால் ரூ.4 கோடியே 50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் பறிமுதல் செய்யப்படும் அவர்களின் படகுகள் திருப்பி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது.

அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தன. தமிழ்நாட்டு மீனவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கையாக இலங்கை அரசு அச்சட்டம் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

ஆனால் தற்போது மேலும் தமிழக மீனவர்கள் பிரசனையை சர்ச்சையாக்கும் நோக்கில் ஏற்கனவே விதித்து இருந்த அபராத தொகையை ரூ.6 கோடியே 75 லட்சமாக உயர்த்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.அதற்கான அறிவிப்பை மீன்வள அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த மசோதா இன்னும் ஓரிரு வாரத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.