ஜெ. மரணம் – விசாரணை கமிஷன் + போயஸ் கார்டன் அரசு நினைவிடமாகிறது!

ஜெ. மரணம் – விசாரணை கமிஷன் + போயஸ் கார்டன் அரசு நினைவிடமாகிறது!

தமிழகத்தில் ஆட்சி செய்து வந்த ஜெ. மரணத்திற்கு பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை சரி செய்து அணிகளை இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டது. குறிப்பாக டிடிவி தினகரன் ஆதர வாளர்கள் தனித்து செயல்படத் தொடங்கியதால் புதிய பிரச்சினை உருவானது. அதேசமயம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் இணைப்பு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக ஓபிஎஸ் தரப்பினரின் முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற எடப்பாடி தரப்பினர் முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழகத்தின் முதலமைச்சராக திறம்பட பணியாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன. எனவே, ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.

தமிழக முதலமைச்சராக 6 முறை திறம்பட பணியாற்றிய அவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர். அனைவரின் மனதிலும் நீக்கமற நிறைந்துள்ள அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. எனவே, அவரது சாதனைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான ‘வேதா நிலையம்’, அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும்”என்று அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேசமயம், அணிகள் இணைப்புக்கு ஓ.பி.எஸ். தரப்பினர் வைத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதால் அதிமுக இரு அணிகள் விரைவில் இணைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து அ.தி.மு.க.வினா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . ”தர்ம யுத்தத்தின் முக்கியமான வெற்றி இது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் பொது எதிரியை சந்திக்க வேண்டிய நேரம் இது. எனவே வெகுவிரைவில் ஒரு தாய் மக்களாக அனைவரும் இணைவதே சிறப்பாக இருக்கும் என்று மஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் விருப்பப்படி சசிகலா குடும்பத்தை ஓரம்கட்ட விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வெளியிடப்பட்டது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா 1989 ஜெ அணி, ஜானகி அணி எனப் பிரிந்து அதனால் திமுக ஆட்சிக்கு வந்ததை அதிமுகவின் இரண்டு அணித் தலைவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எண்ணியபடி திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்கிற நோக்கத்தோடு இருவரும் அணிகள் இணைப்புக்கு முன் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் மட்டுமின்றி, அவரின் மற்ற சொத்துக்களையும் அரசுடைமை ஆக்க வேண்டும் என்றார்.

சிலர் வேண்டும் என்றே பொதுச்செயலாளர் சசிகலா மீதே பழியைப்போடுகிறார்கள். எங்களுடைய நிலைப்பாடெல்லாம் ஒரு நீதிபதி போதுமா? என்பதுதான். இப்போது அமர்வு நீதிபதிகளாக இருக்கக் கூடிய இன்னும் இரு நீதிபதிகளைக்கூட சேர்த்து ஒரு கமிஷனை அமைக்கலாம். என்று தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார்

காங்கிரஸ் மூத்த தலைவா் பீட்டா் அல்போன்ஸ், பதவியில் இருப்பவா்கள் தொடா்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தரம் தாழ்ந்த நடவடிக்கை என்றாலும் ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பதற்கு பதிலாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .

பொதுமக்களிடையே நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தலைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் சொல்லி உள்ளார்

error: Content is protected !!