தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகை ரத்து

தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகை ரத்து

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களின் வாழ்வாதாரம் கருதி தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளார்.

சென்னை – கலைவாணர் அரங்கில் இன்று (5.2.2021) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் ஆற்றிய உரை விவரம்:

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

என்பது வள்ளுவப் பெருந்தகையின் பொய்யாமொழி.

உழவுத்தொழில் அன்றி, பிற தொழில்களைச் செய்யும் அனைவரையும், உழவர்களே தாங்குவதால், அவர்களே இந்த உலகத்திற்கே அச்சாணி போன்றவர்கள். ஒரு நாட்டின் வளம், அந்த நாட்டின் விவசாயத்தைப் பொறுத்தே அமையும். அதனால்தான், புரட்சித்தலைவி அம்மா அவர்கள், வேளாண்மை உள்ளிட்ட முதன்மை துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பல திட்டங்களைத் தீட்டி, அதனைச் செயல்படுத்த, அதிக நிதி ஒதுக்கீடும் வழங்கினார்கள். அந்த வழியை வழுவாமல் பின்பற்றும் எனது தலைமையிலான மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும், வேளாண் பெருமக்களின் நலன் பேணவும், வேளாண்மை செழிக்கவும் பல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

குடிமராமத்து மற்றும் பல்வேறு நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள் மூலம் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண் தொழில் செழிக்க நுண்ணீர்ப் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப் பண்ணையம், வேளாண் விற்பனை மையங்கள் மேம்பாடு, காய்கறி, பழங்கள் சாகுபடியை ஊக்குவிக்க சந்தை தொடர் கட்டமைப்புத் திட்டம், உயர்தொழில்நுட்ப சாகுபடி, பயிர் காப்பீட்டுத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் எனது தலைமையிலான தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயம் சார்ந்த தொழில்களான கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கால்நடைத் துறையின் பங்கும் அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் துயர் ஏற்படும்போதெல்லாம், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 இலட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.

2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக இழப்பைச் சந்தித்த விவசாயப் பெருமக்களுக்கு 2,247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையாக மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வாழ்வு செழிக்க, பல்வேறு நலத் திட்டங்களும், வேளாண் கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்களும் எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2019-20ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில், விவசாயமும் பாதிப்புக்கு உள்ளாகியதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நிவர், புரெவி போன்ற புயல்களும், அதைத் தொடர்ந்து, சென்ற மாதம் பருவம் தவறிப் பெய்த கடும் மழையும், பெருத்த பயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால், கடன் பெற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் அல்லலுக்கு உள்ளாகினர். இந்தப் பேரிடர், அறுவடைகளுக்குத் தயாராக இருந்த நெல், கரும்பு, வாழை, தோட்டப் பயிர்களை மட்டுமல்லாது, மானாவாரி பயிர்களையும் பெருமளவில் சேதப்படுத்தியது.

வேளாண் பெருமக்களின் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான அரசு, மத்திய அரசின் நிதி விடுவிப்பையும் எதிர்பாராமல், சாகுபடி செய்த பயிர்களுக்கான இடுபொருள் உதவித்தொகை 1,717 கோடி ரூபாயை 16.43 இலட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டு, அந்தத் தொகையையும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த இடுபொருள் உதவித்தொகையானது, விவசாயிகளின் துயரைத் துடைத்தாலும், அவர்கள் மீண்டும் பயிர்த்தொழிலைத் தொடர உதவ வேண்டும் என்று தமிழக அரசு எண்ணியது. மேலும், விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 இலட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

https://twitter.com/aanthaireporter/status/1357595520873627651

“அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்”

நானும் ஒரு விவசாயி; விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்; வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையினால், பயிர்க்கடன் நிலுவை வைத்துள்ள 16.43 இலட்சம் வேளாண் பெருமக்களும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதும், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் அளிப்பதாக திமுகவினர் வாக்குறுதி அளித்தனர். அவ்வாக்குறுதியை அவர்களால் நிறைவேற்றவே முடியவில்லை என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோன்று, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது, நாங்கள் வெற்றி பெற்று வந்தவுடன், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சியினர் 38 இடங்களில் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவுடன், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்தார்கள். இதுதான் அவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் கடைப்பிடிக்கும் வாடிக்கை.

தேர்தலின் போது அளிக்கப்படும் வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

மாண்புமிகு அம்மாவும், மாண்புமிகு அம்மாவின் அரசும்,

சொல்வதைச் செய்வோம்;

செய்வதை மட்டுமே சொல்வோம்;

சொல்லாத பிற நன்மைகளையும் செய்வோம்.

மாண்புமிகு அம்மாவின் அரசு தற்போது பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்த உள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று (5.2.2021) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!