September 26, 2021

டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் இருண்ட காலம் !- முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உரை!

017-ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளான ஆளூநரின் உரையுடன் நேற்று துவங்கியது. இரண்டாவது நாளான இன்று தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்த அவர் டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் இருண்ட காலம் என்று குறிப்பிட்டார்.

ops jan 24

மேலும்  இன்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை அவர் முன்மொழிந்து உரையாற்றிய போது, “’கடந்த டிசம்பர் திங்கள் 5 ஆம் நாள், தமிழ்நாட்டின் இருண்ட நாள். நம்மையும், உலகெங்கும் உள்ள தமிழர்களையும் நிலைகுலையச் செய்த நாள். அன்றுதான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாக இருந்து, ஜனநாயகக் கடமைகளைப் பேணிப் பாதுகாக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்கவும் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்ட, தமிழக மக்களின் இதயங்களில் கொலுவீற்று தமிழகத்தின் முதல்வராக இருந்த, ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்தார். ஜெயலலிதா இப்பூவுலகைவிட்டு மறைந்தபோதிலும், நமது இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம்மையெல்லாம் வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அரசியல் ஆசான் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின்படி, 1982 ஆம் ஆண்டு அதிமுகவில் காலடி எடுத்து வைத்த ஜெயலலிதா, சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், 1983 ஆம் ஆண்டு கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள எம்.ஜி.ஆரால் பணிக்கப்பட்ட ஜெயலலிதா , தனது முதல் பிரச்சாரத்திலேயே அனைத்து எதிர்க்கட்சிகளையும் தோல்வி முகம் காணச் செய்து கழக வேட்பாளரை மகத்தான வெற்றி பெறச் செய்தார்.

ஜெயலலிதாவின் செயல்பாட்டினை, திறமையை, ஆற்றலை கண்டு வியந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை மாநிலங்களவைக்கு 1984 ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார். மாநிலங்களவையில் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணும் 185. அண்ணாவும், ஜெயலலிதாவும் மக்கள் தொண்டே மகேசனுக்கு செய்யும் தொண்டு என்ற ஒரே சிந்தனையை தங்கள் உள்ளத்தில் கொண்டவர்கள். அதனால் தான், அவர்களுடைய இருக்கைகளும் இயற்கையாகவே ஒரே மாதிரியாக அமைந்து விட்டன.

அண்ணா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் எரிசக்தி துறை மானியத்தில் கலந்து கொண்டு முதன் முறையாக பேசினார். ஜெயலலிதாவும் முதன் முறையாக எரிசக்தி துறை மானியத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனை இயற்கை கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.”தமிழ்நாட்டிற்குத் தேவை ‘பவர்’ (power) மட்டுமல்ல ‘பவரும்’ (power-ம்) வேண்டும் என்று பேசி மாநில சுயாட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து தனது பேச்சாற்றலை, ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்திய பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.

ஜெயலலிதா மாநிலங்களவையில் முதன்முறையாகப் பேசும்போது அவரின் உரையை கேட்பதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வந்திருந்தார். மாநிலங்களவையே நிரம்பி இருந்தது. ஜெயலலிதா உரையை முடித்தவுடன், அவரது உரையில் உள்ள பொருள், மொழிப் புலமை, உச்சரிப்பு ஆகியவற்றை அனைவரும் பாராட்டினர். ஜெயலலிதாவின் உரை தான் அப்போது நாளிதழ்களின் செய்தியாக இருந்தது. தன்னுடைய பேச்சாற்றலால், எழுச்சிமிகு திட்டங்களால், மக்களை அணுகும் பாங்கால், அளப்பரிய திறமையால், ஓய்வறியா உழைப்பால், தனது கட்சியைச் சேர்ந்தவர்களால் மட்டுமல்லாமல், அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடைய பேரன்பினையும், போற்றுதலையும், பாராட்டினையும் ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா.

தனது தன்னம்பிக்கையினால், ஆளுமைத் திறத்தால், நெஞ்சுறுதியால், துணிச்சலால், எதிரியும் தன்னை மதிக்கத்தக்க அளவிற்கு, பாராட்டத்தக்க அளவிற்கு, புகழத்தக்க அளவிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஜெயலலிதா.
1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தபோது நடைபெற்ற மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக, தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து, கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தவர் ஜெயலலிதா.

1987-ல் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின், அதிமுக இரண்டாக பிளவுபட்டது. கழகத்தின் தேர்தல் சின்னமான ‘இரட்டை இலை’ முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஜெயலலிதாவின் தலைமையிலான அணி 27 இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, இரண்டாக பிளவுபட்ட கழகம், ஜெயலலிதா தலைமையில் ஒன்றாக இணைந்தது. ஒன்றுபட்ட அஇஅதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.கழகத்தின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது. இந்தியாவிலேயே இழந்த சின்னத்தை மீட்ட ஒரே இயக்கம் அதிமுகதான். அதனை மீட்ட பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு 225 இடங்களைப் பெற்றுத் தந்ததோடு, தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் மற்றும் இளம் முதல்வர் என்ற பெருமையும் ஜெயலலிதாவை வந்தடைந்தது. இந்தத் தேர்தலில் தான், 31 பெண் உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா.

2001, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில், அதிமுகவை வெற்றி பெறச் செய்ததோடு, ஜெயலலிதா முதல்வராகவும் பொறுப்பேற்று நல்லாட்சியை தமிழகத்தில் நடத்திக் காட்டினார். 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிலே இருந்த கட்சியை பொதுத் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்து வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், சோதனைகளை கடந்து சாதனைகளை படைத்தவர். சவால்களை வெற்றி கண்டு சரித்திரம் படைத்தவர். ஜெயலலிதா தனது வாழ்க்கையில் எதிலுமே, எப்பொழுதுமே, நம்பர் 1 தான். படிப்பில், நாட்டியத்தில், திரையுலகில், அரசியலில் என அனைத்திலும் ஜெயலலிதா நம்பர் 1 தான். அனைத்திலும் நம்பர் 1 ஆக இருந்த ஜெயலலிதா, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாகவே ஆக்க விரும்பி, அதை செயல்படுத்தியும் காட்டினார்.

காவிரி நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தியது, தீவிரவாதிகளை அடக்கி ஒடுக்கியது, புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து சென்னைவாழ் மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்தது, விலையில்லா அரிசியை வழங்கியது, கட்டணமில்லாக் கல்வியை உறுதி செய்தது என ஆயிரக்கணக்கான திட்டங்களுக்குச் சொந்தக்காரர் ஜெயலலிதா.

ஜெயலலிதா ஏற்படுத்திய அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகங்கள், அம்மா விதைகள், அம்மா திட்டம் என அம்மா பெயர் தாங்கிய பல்வேறு திட்டங்கள் என்றென்றும் அவரது மங்காப் புகழை எடுத்து இயம்பும்.ஏழை எளியோர், ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் வாழ்வில் வளம் சேர்க்க எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தியவர் ஜெயலலிதா. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்குதல், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாலிக்கு தங்கம், கல்வி உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணிணி, கட்டணமில்லாமல் 100 யூனிட் மின்சாரம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா.

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை தன் இரு கண்களாகப் பாதுகாத்தவர் ஜெயலலிதா. எனவே தான், தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் எழுத்தறிவுத் திட்டம், விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், மகளிர் சுகாதார வளாகங்கள், பெண்கள் திருமண உதவித் திட்டம், தாய் சேய் நலன் காக்க உயர்த்தப்பட்ட நிதி உதவித் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

மேலும், மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கான தொழிற்பேட்டைகள், பணிபுரியும் மகளிர் விடுதிகள், உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, பணிபுரியும் மகளிருக்கு 9 மாத கால மகப்பேறு விடுப்பு, மகளிர் உடல் பரிசோதனைத் திட்டம், தாய்ப் பால் வங்கி திட்டம், பொது இடங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம், குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு’ என்றார் திருவள்ளுவர்.

அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர். அன்புடையவரோ, தன் உடல், பொருள், ஆவி அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அன்பால் அனைவரையும் கட்டுப்படுத்தியவர் ஜெயலலிதா. தூய்மையான அன்பை மக்களிடத்திலே செலுத்திக் கொண்டிருந்ததால் தான், ஏழைத் தாய்மார்களுக்கு, ஏழை மாணவ மாணவியருக்கு, ஏழை மக்களுக்கு வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்ததால் தான், ஜெயலலிதாவின் பிரிவைத் தாங்க முடியாமல் கோடானு கோடி மக்கள் கதறிக் கதறி அழுத காட்சியை நாம் கண்டோம். அன்புக்கு மிஞ்சியது ஏதுமில்லை என்பதை ஜெயலலிதா நடைமுறையில் காட்டிவிட்டு சென்று இருக்கிறார்.

அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தை சிந்திக்கக் கூடிய அரசியல் மேதையாக வாழ்ந்து, தன் வாழ்நாளையே இந்த நாட்டிற்காக அர்ப்பணித்த மாமேதை ஜெயலலிதா.

பேரவைத் தலைவரே!

தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் ஜெயலலிதா மறைவுக்கு, பின்வரும் இரங்கல் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

”அகிலத்தின் அகல் விளக்காய்; தியாகத்தின் திருவிளக்காய்; ஒளி தரும் தீபமாய்; மனிதாபிமானத்தின் மறுஉருவமாய்; மனிதநேயத்தின் இலக்கணமாய்; காவிரியை மீட்டு வந்த பொன்னியின் செல்வியாய்; தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவியாய்; எட்டரை கோடி தமிழ் மக்களின் ஏந்தலாய்; பன்மொழிப் புலவராய்; பல்கலை வித்தகராய்; கல்விக்கு கணினி, உயிர் காக்க காப்பீடு, கழனிக்கு காவிரி, உலைக்கு அரிசி, தமிழக உயர்வுக்கு ஆலை என அனைத்தையும் தந்தவர்.

ஈடில்லா மாநிலமாய் தமிழகத்தை உயர்த்திட்ட வான் மழை மேகமாய்; தமிழ் மக்களின் தாயாய்; தமிழ் மொழியின் பாதுகாவலராய்; தமிழ்நாட்டின் தவப்பெரும் புதல்வியாய்; ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்ற தத்துவத்தையே வாழ்க்கையாய் அமைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்றியவர்.

இறுதிவரையில் தனக்கென வாழாமல் பிறருக்குரியவராக வாழ்ந்தவரும், அனைவரின் அன்பிற்கும், போற்றுதலுக்கும் உரியவராகவும், மாபெரும் மக்கள் இயக்கமாம் அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் பணியாற்றிய ஜெயலலிதா யாரும் எதிர்பாராத வகையில் மறைந்தமை குறித்து இப்பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், ஆற்றொணாத் துயரத்தையும் தெரிவிப்பதோடு, அவரின் மறைவால் வருந்தும் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது” என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்