May 13, 2021

நடிகர் விவேக் காலமானார்!

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கோயில்பட்டிஅருகே உள்ள பெருங்கோட்டூர் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய முழு பெயர் விவேகானந்தன். இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான ‘மனதில் உறுதிவேண்டும்’ படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த விவேக் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

கலைவாணர் என்.எஸ்.கே போல அவர் நடித்த படங்களில் நகைச்சுவை காட்சிகளில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துக் கூறியவர். நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அவருக்கு ‘சின்ன கலைவாணர்’ என்ற அன்பு பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துக்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவர்.

மேடைகள் தோறும் கலாமின் கருத்துக்களை பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தவர் விவேக்.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதை பராமரிக்கவும் செய்து செய்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதை பராமரிக்கவும் செய்து செய்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.