September 20, 2021

கர்ப்பிணி மனைவியை உடனிருந்து கவனிக்க கிரிக்கெட் வாய்ப்பை உதறிய உத்தப்பா!

இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஷீதல் கௌதமும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஷீதல் கௌதம் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் கேபிஎல் (கர்நாடகா பிரீமியர் லீக்) தொடர் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. ராபின் உத்தப்பா கேபிஎல் தொடரில் பிஜாபூர் புல்ஸ் அணியின் கேப்டன் ஆவார். கடந்த ஆண்டு கேபிஎல் தொடரில் தொடர் நாயகனாகவும், சிறந்த கேப்டனாகவும் திகழந்து பிஜாபூர் புல்ஸ் அணிக்கு கோப்பை பெற்று தந்தார். ஆனால் இந்த ஆண்டு கேபிஎல் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானது. அதற்கான காரணம் தெரியாது ரசிகர்கள் கேள்விக்குறியுடன் இருந்தனர்.இந்நிலையில், ராபின் உத்தப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் கேபிஎல் தொடரில் பங்கேற்காததுக்கான காரணத்தை ஒரு செல்ஃபி விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

என்னிடம் பலர் கேபிஎல் தொடரில் பங்கேற்காதது ஏன் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான 2 காரணங்களை தற்போது கூறுகிறேன். முதல் காரணம், நானும் எனது மனைவி ஷீதலும் எங்களது முதல் குழந்தையின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் எனது மனைவியின் அருகில் இருந்து அவருக்கு தேவையான உதவிகளையும் உபசரிப்பும் செய்ய வேண்டும்.

அடுத்த மாதம் ரஞ்சி கோப்பை தொடங்கவுள்ளது. அதனால் அதுவரை என்னால் எவ்வளவு நேரம் அவருடன் செலவிட முடியுமோ செலவிடுவேன். அடுத்த மாதம் ரஞ்சி தொடரில் பங்கேற்க சென்று விட்டால், மீண்டும் குழந்தை பிறக்கும் தருணத்தில்தான் திரும்புவேன். அதனால் பெரும்பாலான நேரத்தை அவருடன் செலவிட்டு குழந்தைக்காகவும், குழந்தையின் வருகைக்காக வீட்டையும் தயார்படுத்த வேண்டும்.

மற்றொரு காரணம், உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். ரஞ்சி கோப்பை மிக நெடிய தொடர், அதில் போட்டிகள் அடுத்தடுத்து நடைபெறும். அதனால் அந்தத் தொடரில் நான் முழுமையாக விளையாட வேண்டும்.

தொடரின் இடையில் காயம் போன்ற காரணங்கள் இடையூறாகிவிடக் கூடாது. அதனால் இந்த ஓய்வு நேரத்தில் எனது உடல்நலம் மற்றும் உடற்தகுதியில் முழுகவனம் செலுத்தவுள்ளேன்.

கேபிஎல் வீரர்களுக்கும் கார்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும் எனது வாழ்த்துக்கள். கேபிஎல்-ஐ சிறப்பாக நடத்தி வருவதற்கு கார்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. இதன் மூலம் நிறைய இளம் வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அடுத்த ஆண்டு கேபிஎல் சீசனில் உங்களை சந்திக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இப்படி மனைவிக்காக ஒரு கிரிக்கெட் தொடரையே உதறித் தள்ளியிருப்பது மூலம் தான், கிரிக்கெட் வீரராக இருந்தாலும் முதலில் தான் ஒரு சிறந்த கணவன் என்பதை உத்தப்பா உணர்த்தியிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற கணவன் தான் அமையவேண்டும் என்று உத்தப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பல பெண்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.