October 25, 2021

”பன்னீர், ஸ்டாலின் இருவரின் கனவுகளும், ஆசைகளும் பலிக்காது” – டி.டி. வி. தினகரன் காட்டம்

அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியான ஓர் அறிக்கையில், ”மக்கள் சக்தி முன் வெல்லமுடியாத, அதிமுகவையும் ஜெயலலிதா அமைத்த அறுதி பெரும்பான்மை கொண்ட அரசையும் வீழ்த்திடலாம் என்று கணக்குப் போட்டு, அதற்காகவே திரைமறைவு திட்டம் தீட்டி, தியான நிகழ்வுகளை நடத்தவிட்டு, அந்த பிரதான நாடகத்தில் `தமக்குத் தாமே’ என சட்டையெல்லாம் கிழித்துக் கொண்டு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தவர்களின் திட்டமெல்லாம் எங்கள் கோடி சிப்பாய் படையின் ஒற்றுமையாலும், 122 சட்டப்பேரவை உறுப்பினர்களின் உள்ளத்து உறுதியாலும் தகர்க்கப்பட்டதை தமிழக மக்கள் அறிவார்கள்.

ttv mar 12

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை புறவழியில் சாய்க்கலாம் என்று தர்மத்திற்கும், நியாயத்திற்கும் மாறாக வெறி கொண்டு அலையும் இவரானாலும் சரி, இவருக்காக ஏவல் ஆட்களாக அதிமுகவை பிளக்க களவேலை செய்யும் எ.வ.வேலுக்களானாலும் சரி ‘எனக்குப் பின்னாலும் நூறாண்டுகளானாலும் அதிமுகவே ஆளும்’ என எங்கள் கம்பீரத் தாய் புனித மிக்க பேரவையில் கர்ஜித்த சபதத்தை இவர்களால் கடுகளவும் அசைக்க முடியாது என்பது நிச்சயம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் இதனை தங்கள் உயிராக கருதி நிறைவேற்றிக் காட்டுவார்கள் என்பது சத்தியம்.

அதிமுக உங்களை ஆதரிக்காமல் விட்டாலும், நாங்கள் ஆதரிப்போம் என்று துரோகத்திற்கு தூபமிட்டதும், அதிமுகவை துண்டாடலாம் என்று கணக்குப்போட்டு தூண்டிலிட்டதும், 1987-ல் நிகழ்த்தியதைப் போலவே இப்போதும் சட்டப்பேரவையில் ஒரு கலவரத்தை நடத்த துடித்ததும் அதன்மூலம் ஜெயலலிதாவின் அரசுக்கு இன்னல் விளைவிக்கலாம் என பெருமுயற்சி எடுத்ததும் என தி.மு.க. செயல் தலைவர் தீட்டிய தீய நோக்கத் திட்டங்கள் யாவும் தகர்த்தப்பட்டு எவ்வாறு தலைகுனிந்தனவோ அதுபோலவே… ‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே சட்டப்பேரவை தேர்தல் வரும்’ என்ற ஸ்டாலினின் ஜனநாயகத்திற்கு விரோதமான ஆசை ஒருநாளும் நிறைவேறாது.

கனவு காண்பது ஸ்டாலினுக்கு வெகுகால பழக்கம் என்றாலும், அதற்காக அவர் கையாளும் யுக்திகளும் மக்களாட்சிக்கு எதிரான யுக்திகளும் இப்போது மட்டுமல்ல; எப்போதும் வெல்லாது என்பதை அவர் உணர்ந்து கொள்வதே நல்லது. மேலும், ஒருமித்த நண்பர்களின் சிந்தனைகளும், செயல்களும் ஒன்றாகவே இருக்கும் என்பதுபோல, திமுக.வின் உத்தரவுகளுக்கு உழைப்பவராக செயல்பட்டு வரும் ஓ. பன்னீர்செல்வமும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்’ என்று பேசியிருக்கிறார். ஏற்கெனவே, ஜெயலலிதாவின் ஆட்சியை கவிழ்க்கப் பார்த்து தலைகுனிந்தவர். சட்டப்பேரவையில் தனக்கு ஆதரவு இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி பலரையும் ஏமாற்றியவர். இப்போது, தம்மிடம் உள்ளவர்கள் தாய்க் கழகத்தில் இணைய தயாராகிவிட்டதை தெரிந்து கொண்டு அதை தடுப்பதற்காகவே ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிடப் போகிறோம்’ என்று பேசி, போகாத ஊருக்கு பன்னீர் வழிதேட பார்க்கிறார். எப்போதும் துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை.

முதுகில் குத்துகிற அரசியலால் முன்னுக்கு வர நினைப்பவர்கள் எந்நாளும் பொது வாழ்வில் நிலைத்தது இல்லை. தம்மை வாழவைத்த அதிமுக என்கிற ஆல விருட்சத்தின் ஆணி வேரில் அமிலம் ஊற்ற விரோதிகளோடு கூடி திட்டமிடும் பன்னீருக்கு காலம் நிச்சயமாய் பாடம் கற்பித்தே தீரும். எனவே, பன்னீர், ஸ்டாலின் இருவரின் கனவுகளும், நியாயமற்ற ஆசைகளும் ஒருநாளும் பலிக்காது” என்று தினகரன் தெரிவித்துள்ளார்..