தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் என்கிற டி. ஆர். மகாலிங்கம்!

1923ல் பிறந்த சிறந்த பாடகர், நடிகர். இம்மண்ணில் 55 வருடங்கள் மட்டுமே வாழந்தார். ஹைபிட்ச் பாடல்களுக்கென்றே பிறந்தவர் போல அவ்வளவு அனாயாசமாக உச்சத்தைத் தொட்டவர் டி.ஆர். மகாலிங்கம். அந்தக் கால பாடகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், எஸ்.சி. கிருஷ்ணன், இவர் என எல்லோருமே மைக்செட் இல்லாத அந்தக் காலங்களில் கூடியுள்ள மக்கள் அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் பாடிப் பழகியவர்கள். இனிமையும் குன்றாது பாடினார்கள்.  இதனிடையேதான் 1937ல் நந்தகுமார் என்ற படம் மூலமாக திரையுலகில் பிரவேசித்தார். பல படங்களில் நாயகனாக வும் பிற்பாடு குணச்சித்திர, புராண வேடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். 1945ல் வந்த ஸ்ரீவள்ளி படத்தில் முருகக் கடவுள் வேடத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

இவரது கலைப் பயணத்தில் சில படங்கள்: பூலோகரம்பை, நாம் இருவர், வேதாள உலகம், ஞானசௌந்தரி, பவளக்கொடி, லைலா மஜ்னு, இதயகீதம், பாரிஜாதம், மோகனசுந்தரம், மாலை இட்ட மங்கை, ஆடவந்த தெய்வம், கவலை இல்லாத மனிதன், ரத்தினபுரி இளவரசி, திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர், ராஜராஜ சோழன், திருமலைத் தெய்வம், கிருஷ்ணலீலை……. விஸ்வநாதன் ராமூமூர்த்தி இசையில் இவர் அருமையாகப் பாடிய “செந்தமிழ் தேன் மொழியாள்” பாடல் இன்றளவும் மெல்லிசை மேடைக் கச்சேரிகளில் தவறாமல் பாடப்படுகின்றது.

இவரது ஹிட் பாடல்கள் பல. அவற்றில் சில: எங்கள் திராவிடப் பொன்னாடே…., இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை…., தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே…., நமச்சிவாய என்று சொல்வோமே….. இசையமைப்பாளர் ஜி.ராமனாதனுக்கு இவர் குரல் மிகவும் பிடித்தமானதால் நிறைய வாய்ப்பு கொடுத்தார். நானன்றி யார் வருவார் என்ற பாடலை மெலடியாகப் பாடி அசத்தியிருப்பார்.

இதனிடையே புகழின் உச்சியை அடையும்போது, ஹீரோக்ள் பொதுவாகச் செய்யும் அதே தவறுகளை செய்தார் மகாலிங்கம். தன் படத்துக்கு இன்னார்தான் இசையமைக்க வேண்டும், இன்னாரைத்தான் நாயகியாகப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய ஆரம்பித்தார். அதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுக்க, தானே தயாரிப்பில் இறங்கினார் மகாலிங்கம்.

மோகனசுந்தரம், சின்னதுரை, மச்ச ரேகை, தெருப்பாடகன், விளையாட்டு பொம்மை என்று அவர் தயாரித்து நடித்த படங்களில் பெரும்பாலானவை தோல்வியைத் தழுவின.

பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில் சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும் வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.

மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.

புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால், பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.

அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய ‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக அமர்த்தினார். மதுரையிலேயே தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்துவந்தவர் கண்ணதாசன்தான்.

17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால் சிந்திக்கக்கூட முடியவில்லை. 1958-ல் வெளியான அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்.

சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞரான மகாலிங்கம், வாழ்வின் இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சினார். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில் கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

53-வது வயதில் டி.ஆர்.மகாலிங்கம் மறைந்தபோது, அவரது டைரியில் 72 நாடகங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. முன்பணத்தைத் திருப்பித் தருவதற்குக் குடும்பத்தினர் முயன்றபோது, பல்வேறு கிராமத்தினரும் அதை மறுத்துவிட்டனர்.

தந்தையின் ஒப்பந்தத்தை அவரது 15 வயது மகள் சாவித்ரி மகாலட்சுமி பாட்டுக் கச்சேரி நடத்தி நிறைவேற்றினார். இப்போதும் மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார் சாவித்ரி. அந்த மகளின் குரல் வளத்திலும் இசைத் தேர்ச்சியிலும் இன்றளவும் படர்ந்துருக்கிறார் டி.ஆர். மகாலிங்கம்.