October 18, 2021

கழுத்தறுப்பட்ட ராம்குமாரை சென்னைக்கு தூக்கிட்டு வந்தாச்!

சுவாதி கொலை வழக்கில் பிடிபட்ட ராம்குமாரிடம், கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் காலை நெல்லை சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.தொடர் சிகிச்சையின் காரணமாக ராம்குமார் ஓரளவு குணமாகிவிட்டதாகவும், அவனது கழுத்தில் உள்ள காயங்கள் ஆறி வருவதாகவும் அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதாகவும், பயணம் செய்யும் நிலைக்கு தயாராகி விட்டதாகவும் கூறினர். என்றாலும், அவனது கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவரால் தற்போது அதிக நேரம் பேச முடியாது என்றும், ஒரு வாரம் சென்ற பின்னரே அவரால் முழுமையாக பேச முடியும் என்றும் கூறினார்கள்.ராம்குமாரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

ram july 4

முன்னதாக ராம்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ராமதாசை நேற்று மதியம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரது முன்னிலையில் கைதான ராம்குமாரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து நாளைக்குள் (அதாவது இன்று) சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர 14–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராம்குமாரை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் உத்தரவிட்டார்.

பின்னர் கொலையாளி ராம்குமாரை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இதற்காக 2 ஆம்புலன்சுகள் கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரி வாசலில் நிறுத்தப்பட்டன. சரியாக நேற்று மாலை 4.20 மணிக்கு ராம்குமாரை வார்டில் இருந்து ‘ஸ்டிரெச்சர்’ மூலம் வெளியே கொண்டு வந்து ஒரு ஆம்புலன்சில் ஏற்றினார்கள்.அப்போது அந்த ஸ்டிரெச்சரை முழுவதுமாக மறைத்தபடி போலீசார் வந்தனர். ராம்குமாரின் முகம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவரது முகத்தை துணியால் மூடி இருந்தனர். ஆம்புலன்சில் ராம்குமாரை ஏற்றியபோது அங்கு குவிந்து இருந்த பத்திரிகை புகைப்படக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்கள் படம் எடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை படம் பிடிக்கவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது.

ராம்குமார் ஏற்றப்பட்ட ஆம்புலன்சில் மயக்க மருந்து நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ உதவியாளர் ஆகியோரும் இருந்தனர். அதன் பின்னால் மற்றொரு ஆம்புலன்சும் சென்றது. இரு ஆம்புலன்சுகளிலும் தலா ஒரு மாற்று டிரைவரும் இருந்தனர்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சுகள் அங்கிருந்து சென்னை வந்தன. சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் தேவராஜன் தலைமையிலான தனிப்படையினர் ஒரு ஜீப்பிலும், 2 இன்ஸ்பெக்டர்கள், 18 போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் மேலும் 4 ஜீப்புகளிலும் ராம்குமார் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்சின் முன்னும், பின்னும் பாதுகாப்பாக வந்தனர். இதுதவிர அதிவிரைவுப்படை போலீசாரும் ஒரு வேனில் பாதுகாப்புக்காக வந்தனர்.