October 18, 2021

பிரதமருக்கு விஷ ஊசி போட்டிருப்பார் ராகுல்! – சு.சுவாமி பகீர்

பார்லிமெண்டில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை கட்டித்தழுவி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மக்களவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பல்வேறு தலைவர்கள் மக்களவையில் பேசினார்கள். காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல் காந்தி, பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

தனது பேச்சை ராகுல் காந்தி முடித்தப் பிறகு பிரதமர் இருக்கைக்குச் சென்று யாரும் எதிர்பாரா வகையில் மோடியை கட்டித் தழுவினார். பின்பு ராகுலை அழைத்து பிரதமர் மோடி கைக்குலுக்கினார். இது பின்பு சமூக வலைதளங்களில் வைரலானது. ராகுலில் இந்தச் செயலை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். இறுதியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்மொழிந்தார். முதலில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்தது. பிறகு வாக்கெடுப்பு பட்டன் தேர்வு முறையில் நடத்தப்பட்டது. பகுதிவாரி முறையில் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 126 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகவும் 325 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது

இந்நிலையில் ராகுல் மோடியை கட்டித்தழுவியது குறித்து பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிப்பதற்கு பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும், கொரியர்களும் மற்றவர்கள் மீது விஷ ஊசிகளை செலுத்துவதற்கு இந்த முறையை கடைபிடிப்பார்கள்.

அதனால் பிரதமர் மோடி வெகுவிரைவாக மருத்துவமனை சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல் தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்துப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியன் சுவாமியின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் சாஜகான்பூரில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,”4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக செலுத்தப்படுகிறது. விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட வேண்டிய விஷயங்களை அரசு செய்யும். இந்த அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்கள் காரணம் ஏதும் கூறவில்லை. மாறாக தேவையில்லாமல் கட்டித் தழுவுகின்றனர். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைகின்றன. இதன் மூலம் தாமரை மலர இது நிச்சயம் உதவும்.

பிரதமர் நாற்காலியை பிடிக்க ராகுல்காந்தி ஓடுகிறார். பிரதமர் நாற்காலியை தவிர வேற எதையும் அவர் பார்க்கவில்லை. 2019-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக நாங்கள் உறுதிமொழி எடுத்துள்ளோம். காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்த போது விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்” என்றார்.