October 17, 2021

கொலை வழக்கில் தலைமறைவான மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது! வீடியோ

ந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவர். இவருக்கும் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தன்கட் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 4–ந் தேதி சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பி  ஓடி விட்டார்கள். அதே சமயம் சாகரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மல்யுத்த வீரர் சுஷில் குமாரைத் தேடி வந்தனர்.

கடந்த இரு வாரங்களாக தனிப்படை அமைத்து சுஷில் குமாரை ஹரியாணா, உத்தரகாண்ட் எனப் பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர். அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ போடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முன்ஜாமின் மனு தள்ளுபடியானது.

இதற்கிடையே, மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர். சுஷில் குமாரை போலீசார் தொடர்ந்து திவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சுஷில்குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்த பஞ்சாப் போலீசார், டில்லி போலீசிடம் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகின. இதனை தற்போது, டில்லி குற்றப்பிரிவு சிறப்பு பிரிவு அதிகாரி நீரஜ்குமார் உறுதி செய்துள்ளார். சுஷில்குமார் நாட்டை விட்டு தப்பிச் செல்லாத வண்ணம் அவுட்லுக் நோட்டீஸ் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு போலீசார் வாரண்ட் பிறப்பித்து கைது செய்துள்ளனர்.