December 9, 2021

ஓப்பன் த டோர் : ஸ்டெர்லைட்டை திறந்து இயக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி!

மிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் மூடி சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு மருத்துவ ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டிருக்கிறது. நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1000 டன் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த இடைக்கால மனு மீது இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.அதே சமயம் மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

இதை அடுத்து, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிப்பு பணிக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு செய்யப்பட்டு இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று தமிழக அரசு தரப்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குதான் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்சிஜன் உற்பதிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அனைத்துக் கட்சியின் ஒப்புதலைப் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

ஆனால் தமிழக அரசு கோரிக்கையை நிராகரித்துஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனை மத்திய அரசிடம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனில் தமிழ்நாட்டிற்கு வழங்குவதற்கு முன்னூரிமை தரப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் ஆக்சிஜன் தயாரிக்க 250 பேரை ஆலைக்குள் அனுமதிக்கலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேற்பார்வை குழுவில் உள்ளூர் மக்களை நியமிக்க வேதாந்தா எதிர்ப்பு தெரிவித்தது.

ஆக்சிஜன் தயாரிப்பை மேற்பார்வையில் 6 பேர் குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் யோசனை செய்துள்ளது. நீர் அமைப்பு, சூற்றுச்சூழல் அமைப்பு மூலம் 3 உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 2 உறுப்பினர்களை நியமிக்கலாம் எனவும் கூறியுள்ளது. நாட்டின் ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் தான் ஆலை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

மேற்பார்வை குழுவில் தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக செயல்படுவார்கள் எனவும், தூத்துக்குடி துணை ஆட்சியர், இரு அரசு அதிகாரிகள் குழுவில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.