March 22, 2023

பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் அரச குடும்பத்திற்கே !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் நிர்வாகத்தை கேரள அரசே ஏற்றுக் கொள்ளலாம் என 2011-ம் ஆண்டு அம்மாநில ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் கோயில் மீதான முழு உரிமையும் மன்னர் குடும்பத்துக்கு தான் என தீர்ப்பளித்துள்ளது.

18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்பநாப சுவாமி கோவில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மிகவும் புராதனமான இக்கோயிலில் 6 பாதாள அறைகள் இருப்பதாகவும், அவற்றில் சில அறைகளில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் பத்மநாபசுவாமி கோயிலின் மிக அருகே வசித்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டி ஒரு வழக்கு தொடர்ந்தார்.

பத்மநாபசுவாமி கோயிலிலுள்ள 6 ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அரிய பொக்கிஷங்களை கோயில் ஊழியர்கள் உட்பட பலர் திருடி வருவதாகவும், பொக்கிஷங்களை பாதுகாக்க ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

இதனிடையே இக்கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக கேரள ஐகோர்ட்டில்ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு 2011-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில், “”கோவில் நிர்வாகத்தையும், சொத்துகளையும் கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கோவில் பூஜைகள் பாரம்பரிய முறைப்படி தான் நடக்க வேண்டும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2011-ம் ஆண்டே கேரள ஐகோர்ட்டின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் கோவிலில் உள்ள பாதாள அறைகளை திறக்கவும், கோவில் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் விசாரணை நடத்திய நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.