அய்யே.. அவதூறு வழக்கு செல்லுமப்பூ..! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அய்யே.. அவதூறு வழக்கு செல்லுமப்பூ..! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

அதிமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் கிட்டத்தட்ட 150 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இவற்றில் திமுக தலைவர் கருணாநிதி மீது அதிகபட்சமாக 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 9 வழக்குகளும், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் மீது தலா 5 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் மீது 4 வழக்குகள் உள்ளன. பத்திரிக்கைகளில் முரசொலி மீது அதிகபட்சமாக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

law mar 13

இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மீதான அவதூறு வழக்குகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இவை அனைத்தும் இணைத்துக் கொள்ளப்பட்டு, சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆண்டு (2015) மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த வழக்கில் மனுதாரர்கள் மீதான அவதூறு வழக்குகள் சரியா, தவறா என்று ஆராயப்போவதில்லை. ஆனால், அவதூறு வழக்கு அடிப்படை சுதந்திரத்தை பறிக்கிறதா என்பதை பார்க்கப் போகிறோம்” என்று நீதிபதிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து ஜூலை 8, 2015 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்குகளில் பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் விசாரணை விரைவாக முடிந்துவிடுகிறது ஆனால் இந்தியாவில் 10 முதல் 20 ஆண்டுகள் வரை இத்தகைய வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன என மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கூறினார்.

அதேபோல் சுப்பிரமணிய சுவாமியும், அடிப்படை உரிமைகளைக் காரணம் காட்டி அவதூறு வழக்குகளே கூடாது என்று சொல்லிவிட முடியாது. அவதூறு வழக்கு அவசியமானதுதான். கிரிமினல் அவதூறு வழக்குகள்தான் தவிர்க்கப்பட வேண்டும். அவதூறு வழக்கு மூலம் ஒருவரை சிறையில் அடைக்கக் கூடாது. நஷ்டஈடு போன்ற தண்டனைகளை மட்டும் வழங்கலாம் எனக் கருத்து தெரிவித்தார்.

இந்த வழக்கு கடைசியாக கடந்த ஆகஸ்ட் 13, 2015 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா பண்ட் ஆகியோர் ஒத்தி வைத்தனர். பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு அவதூறு வழக்குகள் காரணமாகின்றன. அவதூறு வழக்கு தொடர்பான சட்டப்பிரிவுகள் 499, 500 ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்தன.

இந்நிலையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 19(2)ல் பேச்சுரிமை என்பது அவதூறு தன்மை அல்லாத பேச்சுரிமையைத் தான் குறிக்கிறது. அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ன் கீழ் மற்றவர்களின் மாண்பை குறைக்கும், காயப்படுத்தும் வகையில் ஒருவரது பேச்சும், கருத்தும் இருக்கக் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். எனவே இந்த அவதூறு சட்டங்கள் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்திய குற்றவியல் சட்டத்தில், கிரிமினல் அவதூறு சட்ட வழிவகைகள் அவசியம் தேவை; இவை, பொதுவாழ்வில் ஈடுபடுபவரின் புகழ், கவுரவத்தை காப்பதோடு, பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன என, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!