பொன். மாணிக்கவேல் ஆபரேஷனுக்கு முற்றுப் புள்ளி வைத்தது சுப்ரீம் கோர்ட்!

சென்னை ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என தமிழக அரசு தொடர்ந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு பொன்மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. இதையடுத்து கடந்த ஓராண் டாகவே தமிழக அரசுடன் பொன். மாணிக்கவேலுக்கு மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்குகளில் உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக பொன். மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக குறை கூறுவதும், எந்த ஒரு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்றும் அதிரடியாக நேருக்கு நேர் புகார் கூறியிருந்தார். இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30ம் தேதியோடு நிறைவடைந்தது.

அதனடிப்படையில், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும் படி அரசாணை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவிக்க முடியாது என்று பொன்மாணிக்கவேல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சிலை கடத்தலை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை சிறப்பு அதிகாரியாக நியமித்தது, சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்தியது என்றும் ஆகவே சுப்ரீம் கோர்ட் அல்லது ஐகோர்ட் உத்தரவு இல்லாமல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க எனக்கு அனுமதியில்லை என்றும் பொன் மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று  சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.

தமிழக அரசு வாதம்:

சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலலுக்கு பதவி நீட்டிப்பு தரக் கூடாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு பொன்.மாணிக்க வேல் கீழ்படிய மறுப்பதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சிலைகடத்தல் தடுப்பு வழக்கு தொடர்பான அறிக்கையை தர பொன்.மாணிக்கவேல் மறுப்பதாக புகார் தெரிவித்திருந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு:

பதவி நீட்டிப்பு தரக்கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்குக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.