December 4, 2021

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வியாண்டில் வழங்காமல் சேர்க்கையை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. மேலும் , இந்த விவகாரம் தொடர்பான அனைத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் மருத்துவர்கள் ச்ய்ப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரத்தோகி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு மற்றும் கேவியட் மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “தமிழக அரசின் அரசாணை புதிதல்ல. உயர் சிறப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்குவது என்பது தனி இட ஒதுக்கீடு அல்ல. இது ஒருவகையான மாணவர் சேர்க்கைதான் (different mode of admission). இது சேவை மனப்பான்மையுடன் பணி செய்யும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கான முன்னுரிமையே. மேலும், இது தமிழக அரசின் கொள்கை முடிவு ஆகும். எனவே, இந்த 50% இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

”அரசு மருத்துவர்களுக்கு இவ்வாறு தனி இட ஒதுக்கீடு வழங்குவது பாகுபடுத்திப் பார்ப்பதாகும். அவ்வாறு உள் ஒதுக்கீடு செய்ய முடியாது” என தனியார் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசுத் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு மேற்கண்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், “தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50சதவீத இட ஒதுக்கீடு கிடையாது, என தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஆக இந்த தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை. அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.