March 27, 2023

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடு! – முழு விபரம்!

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே சமயம் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.

இன்று உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக உலகமெங்கும் பரவியது பட்டாசு. பட்டாசு கண்டு பிடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வுதான். அதன் வேதியியல் செயற்பாடு குறித்த விளக்கத்தை நவீன அறிவியல் கொடுக்கிறது. ஆனால், அறிவியல் பயன்பாட்டுக்கு முந்திய பழங்காலத்திலேயே சீனர்கள் பட்டாசைக் கண்டுபிடித்து வெடிக்கச் செய்தார்கள் என்பது வியப்பூட்டும் செய்திதான். கொஞ்சம் விரிவாக சொல்வதானால் உலகிலுள்ள எல்லாரையும் போலவே தொடக்க காலச் சீனர்கள், தங்கள் சமையலுக்கு உப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல்வேறு உப்பு நீரைக் காய்ச்சியும், உப்புச்சுவையுள்ள பாறைப் படிவுகளைச் சுரண்டி எடுத்தும் தங்களுக்குரிய உப்பைப் பெற்றனர். சீனர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி எரிந்து அணையக்கூடிய தன்மையைக் கொண்டது. பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்பைச் சமையலுக்குப் பயன்படுத்தியபோது, அந்த உப்புக்கற்கள் தவறி நெருப்புக்குள் விழுந்தன. நெருப்பில் விழுந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப்போல் பொறித்துகள்களை உதிர்த்தபடி எரிந்து அடங்கியது. இதுதான் பட்டாசுக்கான மூலப்பொருளைச் சீனர்கள் கண்டறியக் காரணமான முதல் வினை.

ஒளியைத் தோற்றுவிப்பதற்காகத்தான் இது முதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த உப்பைக்கொண்டு பல்வேறு ஒளிரும் செயல்களை நிகழ்த்தினர். அந்த ஒளி விளக்கொளியைவிடவும் தகதகப்பாகவும் கண்ணைப் பறிக்கும்படியாகவும் இருக்கவே, தொடர்ந்து பயன்படுத்தலாயினர். பிறகு மூங்கில் குருத்துக்குள் அந்த வெடியுப்பை நிரப்பிப் பற்ற வைத்தனர். அது காதைப் பிளக்கும் சத்தத்தை எழுப்பிய படி வெடித்தது. பிற்பாடு கரியும் கந்தகத்தூளும் கலந்த கலவையும் இவ்வாறு வெடிக்கும் தன்மையுடையதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.வெடிக்கும் பொருளை இறுக்கமான மூங்கில் குருத்துக்குள் இட்டு நிரப்பி தீப்பற்ற வைத்தனர். அந்த வெடிமருந்து தீயினால் திடீரென்று விரி வடைவதால் தன்னைச் சூழ்ந்திருக்கும் மூங்கில் தடுப்பை நொடியின் பின்னத்திற்குள் தகர்க்கிறது. அந்தத் தகர்ப்பொலிதான் வெடியோசையாக ‘பட் படார்’ என்று நமக்குக் கேட்கிறது. மூங்கில் குருத்துக்குள் கீழ்ப்பகுதியை அடைக்காமல் விட்டு ஒரு வால்குச்சியைக் கட்டினால் அந்த வெடி மருந்து திறந்திருக்கும் பகுதியில் விரைந்து வெளியேறுகிறது. அதனால் பெறப்படும் உந்து விசையைக்கொண்டு எந்தத் திக்கிலும் ஏவலாம். அந்த முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப் பட்டதுதான் வாணம். வாணப்பட்டாசின் மேல்நுனியில் வெடிமருந்துக் கலவையை அடர்த்தியாய் அடைப்பதன் மூலம், வெடிக்கவும் வைக்கலாம். அம்முறைப்படிதான் வானில் ஏவப்படும் வாணங்கள் வெடித்துச் சிதறுகின்றன.

சீனர்கள் பட்டாசுப் பயன்பாட்டை அறிந்தவுடன், தீயசக்திகளை விரட்டுவதற்கு அதைப் பயன் படுத்தினர். சீனத்து பௌத்தத் துறவியொருவர் பட்டாசுச் சத்தத்தால் தீயவை அகல்கின்றன என்று கூறினார். அவர் கூறியவாறு சீன அரசர்கள் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. சீனத்திற்குப் பயணம் செய்த ஐரோப்பியப் பயணிகள் பட்டாசு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு, தத்தம் நாடுகளில் பரப்பினர். ஏழாம் நூற்றாண்டிலேயே பட்டாசு தயாரிக்கும் நுட்பங்களைப் பற்றி எழுதப்பட்ட சீனக்குறிப்புகள் உள்ளன.

உலகின் எல்லா நாடுகளுமே பட்டாசுகளைப் பல்வேறு விழாக்களுக்குப் பயன்படுத்துகின்றன. ஒளி சார்ந்த பண்டிகை என்பதால், தீபாவளிக்கு ஒளிரும் பட்டாசுகளைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது.  தமிழகத்தின் சிவகாசியில் உலகின் மிகத்தரமான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதனிடையே பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. வழக்கு விசாரணை யின் போது, பட்டாசுத் தொழில் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்படக்கூடாது, 130 கோடி மக்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடாது, இரண்டுக்கும் இடையே சமநிலை உண்டாக்குவது அவசியம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையில் நாடு தழுவிய தடை விதிக்கக் கூடாது என்றும், அரசின் கண்காணிப்புடன் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பட்டாசு ஆலைகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப் படும் என தெரிவித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்போது நீதிபதிகள் ஒட்டுமொத்தமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடியாது என்று அறிவித்தனர். அதே நேரம் நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிப்பதற்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.

நீதிபதிகள் தீர்ப்பு விபரம் இதோ:-

* குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மற்றும் பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

* அதிக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் மற்றும் பசுமை வகைகள் அல்லாத பட்டாசுகளின் தயாரிப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்படுகிறது.

* பலத்த சத்தம் மற்றும் காற்றை மாசுபடுத்தி குப்பையை ஏற்படுத்தும் சரவெடிகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை.

* தீபாவளி, சீக்கியர்களின் குருபூரப் உள்ளிட்ட பண்டிகைகளின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 11.55 தொடங்கி இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். இது டெல்லிக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதுக்கும் பொருந்தும்.

* மத்திய, மாநில அரசுகள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சமூக அளவில் கொண்டாடுவதற்கு உற்சாகம் அளிக்கவேண்டும். இது போன்று சமூக மையங்களை டெல்லி அரசு ஒரு வாரத்துக்குள் அறிவிக்கவேண்டும். அந்த இடத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் அனுமதிக்கப்பட்ட வகை பட்டாசுகள் மற்றும் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்படும்.

* குறிப்பிட்ட நேரம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பது என்பதை அனைத்து எதிர் மனுதாரர்கள் குறிப்பாக போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட பகுதியின் போலீஸ் நிலைய தலைமை அதிகாரி இதற்கு பொறுப்பேற்று நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

* மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பும் 7 நாட்களுக்கு பிறகும் சுற்றுச்சூழலுக்கு பட்டாசு ஏற்படுத்தும் தீங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும்.

* பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆன்-லைன் வழியாக பட்டாசுகளை விற்க தடை விதிக்கப்படுகிறது. தீர்ப்பை மீறி பட்டாசுகளை விற்பனை செய்யும் ஆன்-லைன் நிறுவனங்கள் கோர்ட்டு அவமதிப்பு செய்ததாக கருதப்பட்டு அவர்களுக்கு உரிய அபராதமும் விதிக்கப்படும்.

* பட்டாசுகளில் பேரியம் உப்பு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

* பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவனம் (பெசோ), வெடிபொருட்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து பட்டாசுகளில் பயன்படுத்தும் அலுமினியம் உள்ளிட்ட வேதியியல் பொருட்களை ஆய்வு செய்து இந்த தீர்ப்பு வெளியிட்ட நாளில் இருந்து இரு வாரங்களுக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

* தீர்ப்பில் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் தவிர்த்து ஏற்கனவே தயாரித்த பட்டாசுகள் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனைக்கு அனுமதி கிடையாது.

* தீபாவளி உள்ளிட்ட பல்வேறு மதங்களின் பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட கொண்டாட்டங் களில் அனுமதிக்கப்பட்ட ரசாயன பொருட்கள் அடங்கிய பட்டாசுகள் மட்டுமே விலைக்கு வாங்குதல், விற்பனை இருப்பு ஆகியவற்றை ‘பெசோ’ நிறுவனம் உறுதி செய்யவேண்டும்.

* தடை செய்யப்பட்ட ரசாயனப்பொருட்கள் அடங்கிய பட்டாசு உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர் களின் உரிமங்களை பெசோ நிறுவனம் ரத்து செய்யவேண்டும்.

* அனுமதிக்கப்பட்ட அளவு ஒலியளவுடன் (டெசிபல்) கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்வதை மார்க்கெட்டில் பெசோ நிறுவனம் உறுதிப்படுத்தவேண்டும்.

* அமைதி பகுதிகளான மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், ஆரம்ப சுகாதார மையங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடிக்காமல் இருப்பதை போலீஸ் நிர்வாகம் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் உறுதி செய்யவேண்டும்.

ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பட்டாசுகளின் இறக்குமதி குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் மற்றும் பள்ளிகள் பட்டாசு வெடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்ட்டின் இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனுவை தாக்கல் செய்ய தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் மாரியப்பன், “பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வரவேற்கிறோம். அதே சமயத்தில், பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியதை பின்பற்றுவது கடினம். ஏனென்றால், மாநிலத்துக்கு மாநிலம் பழக்கவழக்கங்கள் மாறுபடும்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் என்ற ஒன்றே கிடையாது. அதை நாங்கள் தயாரிக்க முடியாது. ரசாயன பயன்பாட்டை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால், அதற்கும் காலஅவகாசம் தேவைப்படும்.
இத்தகைய கட்டுப்பாடுகளால், பட்டாசு தொழில் நசிந்து வருகிறது. நிறைய பேர் உற்பத்தியை குறைத்து விட்டனர். ஆன்-லைன் விற்பனையை பொறுத்தவரை, உரிமம் பெற்றவர்களை விற்க அனுமதிக்கலாம். பட்டாசுகளில் பாரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதித்ததை நீக்கக்கோருவோம்”  என்று அவர் தெரிவித்தார்.