March 27, 2023

போனில் ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டினாலும் அது குற்றம்தான்! – சுப்ரீம் கோர்ட்

நாட்டில் நாம் பிறந்ததற்கு சான்றிதழ் தேடி வாங்குவது தொடங்கி இறப்பு சான்றிதழ் வரையிலும் நம்மை இடை விடாமல் துரத்தி பாடாய் படுத்தி எடுப்பது சாதி. பள்ளி சேர்வதில் தொடங்கி வேலை வாய்ப்பு, சமூகத்தில் ஏற்ற தாழ்வு, ஏன் வீடு வாடகைக்கு கேட்டால் கூட சாதி தேவைப்படுகிறது, இன்றைய அரசியல் கட்சிகள் சாதிகளை வைத்து தான் அரசியலில் காலம் தள்ளி கொண்டிருக்கி றது. இத்தனைக்கும் பலரும் ’சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி வரிகளை முணுமுணுப்ப வர்கள்தான். ஆனாலும் தொடர்ந்து நாட்டில் நடக்கும் சாதிப் பாகுபாடுகளால் சகமனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்துதான் 1955-ல் ‘குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989-ல் ‘தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்’ 1995-ல் உருவாக்கப்பட்டது. ஆனாலும், இந்தச் சட்டமும் வலுவாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. இவற்றை வலுவாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று இந்தியாவில் உள்ள தலித் உரிமை ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடினார்கள். இதன் பலனாகத் தற்போது, ‘தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் திருத்த அவசரச் சட்டம்-2014’ என்கிற சட்டம் கொண்டுவரப்பட்ட்டது.

அதே சமயம் இந்தச் சட்டத்தால் ஒரு பிரிவினர் மட்டும் பயனடைகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மற்ற பிரிவினர்மீது பொய்ப் புகார் கொடுக்கின்றனர். இதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் கடுமையாகப் பாதிக் கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்தச் சட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு விடுதலை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே, இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படு கிறது என்று ஒரு சாரார் சொல்லி வரும் நிலையில் எஸ்.சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களை பொது இடத்தில் இருந்து போனில் ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டினாலும் அது குற்றம்தான். இதற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்’ என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், போனில் தன்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார். திட்டிய நபர் மீது எஸ்சி, எஸ்டி சட்டப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த எப்ஐஆரை ரத்து செய்து குற்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் வழக்கு தொடர்ந்தார். குற்றப் பத்திரிக்கையை ஆய்வு செய்த உயர் நீதிமன்றம், ‘‘முதற்கட்ட விசாரணையில் குற்ற செயலுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பது உறுதியாகி உள்ளது.

பொது இடத்தில் இருந்து போனில் பேசவில்லை என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் நிரூபிக்க வேண்டும்’ என கூறி, அந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் சலமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் சார்பில் ஆஜரான வக்கீல் விவேக் விஷ்னாய், ‘‘எஸ்சி, எஸ்டி சட்டத்தின் 2(1)(எஸ்) பிரிவு பொது இடத்தில் ஜாதி பெயரை சொல்லி திட்டுதல் தொடர்புடையது. இந்த வழக்கில் இருவரும் வெவ்வேறு நகரங்களில் இருந்து போனில் பேசியுள்ளனர்.

எனவே, எனது கட்சிக்காரர் பொது இடத்தில் இருந்து திட்டினார் என கூற முடியாது. இரு நபருக்கும் இடையே போனில் நடந்த தனிப்பட்ட உரையாடல் பொது இடம் என்ற வரம்புக்குள் வருமா? இது கற்பனையான குற்றச்சாட்டு என்பதால், எப்.ஐ.ஆரை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்றார். எப்.ஐ.ஆர் ரத்து செய்யவும், குற்றநடவடிக்கைக்கு தடை விதிக்கவும் மறுத்த நீதிபதிகள், ‘‘எஸ்சி, எஸ்டி பிரிவினரை பொது இடத்தில் இருந்து போனில் திட்டினாலும் குற்றம்தான். இதற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்’’ என விளக்கம் அளித்தனர்.