December 4, 2021

பிரசாந்த் பூஷண் மீதான தண்டனை விவரம் ஒத்திவைப்பு!

நீதித் துறையில் தவறுகள் நடைபெறும்போது அதனை சுட்டிக் காட்டுவது எனது கடமை. அதன் அடிப்படையிலேயே கருத்து தெரிவித்தேனே தவிர, உச்சநீதிமன்றத்துக்கு எதிராகவோ, குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு எதிராகவோ கருத்து தெரிவிக்கவில்லை. அதனால் தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்ட நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக நீதித் துறையை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் 2 பதிவுகள் வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவுகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பாக, பிரசாந்த் பூஷண் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் அளித்து கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அவர் தான் கூறியதில் தப்பேதுமில்லை என்பதால் மன்னிப்புக் கேட்க மறுத்ததை அடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரை மணி நேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மீண்டும் விசாரணை தொடங்கியபோது, தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நீங்கள் ஏற்படுத்திய காயத்தை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும். மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் போன்றோர் நீதித் துறைக்கு எதிராக பதிவிடும் சிறிய கருத்தும் பெரிதாகப் பார்க்கப்படும். நீதித் துறையைச் சேர்ந்தோர் கூறும் கருத்துகள் மக்களிடையே நீதித் துறை மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்யும். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அது என்ன அவ்வளவு மோசமான வார்த்தையா? என்று கூறினர்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா பேசுகையில், எத்தனை நாளுக்குத்தான் நீதிபதிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது. தங்களை தற்காத்துக் கொள்ள நீதிபதிகளிடம் எந்த ஆயுதமும் இல்லை. நீதிபதிகளையும், நீதித்துறையின் மாண்புகளையும் காக்க வழக்குரைஞர்கள்தான் உதவ வேண்டும் என்று கூறினார்.இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை தொடர்பான விவரங்களை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.