March 27, 2023

‘பத்மாவதி’க்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வர லாற்றைக் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோ னும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கியது முதலே ராஜபுத்திர சமூக மக்கள் கடும் தெரிவித்து வருகின்றனர். ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பு பத்மாவதி படத்தில் தவறாக காட்சிகள் இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறது. அதாவது ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பது போல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.  அதிலும்  ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுக்களும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே இந்த படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும் அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதனை பாராட்டிய அரியானா மாநில பாரதீய ஜனதாவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ் பால் அமு, தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என கூறிஉள்ளார். தொடர்ந்து மிரட்டல் எழுந்து உள்ளநிலையில் தீபிகா படுகோனேவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவரது வீட்டிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதீய சத்ரிய மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் பத்மாவதி படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது நடிகை தீபிகா படுகோனே, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தினர். பின்னர், கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். படத்துக்கு தடை விதிக்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அந்த அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர்சிங் பேசுகையில், ‘நடிகை தீபிகா படுகோனேவை உயிரோடு கொளுத்துபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

‘ராணி பத்மாவதியின் தியாகம் தீபிகாவுக்கு ஒருபோதும் தெரியாது. உயிருடன் கொளுத்தப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை தீபிகா தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், இந்த பரிசை அறிவிக்கிறோம்’ என்று புவனேஸ்வர்சிங் பேசிஉள்ளார்.

அதே சமயம் வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் ‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார். பஞ்சாப் மாநில அரசும் இவ்வரிசையில் இணைந்து உள்ளது, வரலாற்றை அழிப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அம்மாநில முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் கூறிஉள்ளார். பத்மாவதி படத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்து உள்ளநிலையில் “சூப்பர் நெருக்கடிநிலை” என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து உள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பத்மாவதி சர்ச்சைகள் வெறும் துரதிஷ்டவசம் மட்டும் கிடையாது, கருத்து சுதந்திரத்தை அழிக்க ஒரு அரசியல் கட்சியின் கணக்கிடப்பட்ட திட்டம். இந்த சூப்பர் நெருக்கடி நிலைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா துறையில் இருக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும், ஒரே குரலில் போராட வேண்டும் என கூறிஉள்ளார்.

இந்நிலையில், பத்மாவதி படத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தன் உத்தரவில், “இந்தப்படம் இதுவரை மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழை பெறவில்லை. அந்நிலையில் இதுபற்றி முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர இயலாது. எனவே தடை செய்ய கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவித்தனர்.