October 16, 2021

கர்நாடகா பர பரப்பு!- நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிப்பரப்பு செய்ய உத்தரவு!

கடந்த வாரம் முதல் பல்வேறு நியூஸ் சேனல்கள் மற்றும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றுள்ள கர் நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை நடந்தது. இதை நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. காங்கிரஸ்-மஜத சார்பாக முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோரும் மத்திய அரசுத் தரப்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் அங்கு இருந்தார்.

கபில் சிபல் வாதத்தைத் தொடங்கினார். “கர்நாடக சட்டமன்றத்தில் நீண்ட கால மரபுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. மூத்த அனுபவம் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினரே தற்காலிக சபாநாயராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது ஆளுநர் போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்திருக்கிறது. மூத்த உறுப்பினர்களே தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இருமுறை தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது’’ என்றார் கபில் சிபல்.

அப்போது நீதிபதிகள், “மனுதாரர்கள் போபையாவின் தகுதியைப் பற்றி புகார் கூறி அதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறினால் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர் பதிலளிக்க வேண்டும், அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப் போடத்தான் வேண்டும். அப்படி செய்யலாமா?’’ என்று கேட்டனர்.

உடனே கபில் சிபல், “போபையா தற்காலிக சபாநாயகராக இருந்து அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கட்டும். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்துவதை தடுக்கவேண்டும்’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி போப்டே குறுக்கிட்டு, “நாங்கள் நேற்று பிறப்பித்த உத்தரவில் தற்காலிக சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தோம். நீங்கள் சொல்வது எங்கள் ஆணைக்கே எதிராக உள்ளதே? அப்படியானால் யாரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது’’ என்று கேட்டார்.

மீண்டும் கபில் சிபல், “இப்போது தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா வித்தியாசமான வரலாறு கொண்டவர். அவர் ஏற்கனவே மேற்கொண்ட தகுதி நீக்க நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டே விசாரித்துள்ளது. எனவே அவரை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது. வேறு யாரேனும் வைத்து நடத்துமாறு ஆளுநருக்கு நீங்கள் வழிகாட்டலாம்’’ என்றுவாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “ நீங்கள் முரண்பாடான வாதங்களை வைக்கிறீர்கள். குறிப்பிட்ட நபரையே தற்காலிக சபாநாயகராக நியமிக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொள்ள சட்டத்தில் வழியில்லை. மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமிப்பது என்பது மரபுதானே தவிர சட்டம் அல்ல. எனவே இந்த மரபு சட்டத்தின் கூறாக மாற்றப்படாத வரை நீதிமன்றம் இதில் தலையிட முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள், “நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் நடத்தப்பட வேண்டுமானால் நம்பிக்கை வாக்கெடுப்பு முழுவதையும் தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதே சிறந்த வழி. சட்டமன்றச் செயலாளர் பொறுப்பேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளை வீடியோ பதிவும் செய்ய வேண்டும்’’ என்று கூறினர்.

நீதிபதிகளின் இந்த முடிவை மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வியும், கபில் சிபலும் வரவேற்றனர்.

அப்போது எடியூரப்பா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இன்று கர்நாடகத்தில் இந்த பிரச்னைதான் பற்றி எரிகிறது. எனவே எல்லா தொலைக்காட்சிகளும் இதைத்தான் ஒளிரப்பும்’’ என்றார்.

இறுதியில் தங்கள் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், “தற்காலிக சபாநாயகரான போபையாவே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார், நம்பிக்கை வாக்கெடுப்பு வெளிப்படையாக நடத்துவதற்கு ஏதுவாக சட்டமன்றச் செயலாளர் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்ப வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர வேறு எந்த செயல் திட்டமும் மாலை 4 மணிக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்று தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று காலை 11 மணி முதல் எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், மறுபுறம் எதிரணி எம்எல்ஏக்களை இழுக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வருகிறது..

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற போதே எதிரணி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் அணி மாறச் செய்ய ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய பாஜக மூத்த தலைவர் ஜனார்த்தன் ரெட்டி இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக எதிர் முகாமில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசப்பட்டு வருகிறது. குமாரசாமி முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து வரும் லிங்காயத்து எம்எல்ஏக்கள் 20 பேரை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்.

வடக்கு கர்நாடகவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங், ஜனதார்த்தன் ரெட்டிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் சேர்ந்து ஹைதரபாத்திற்கு செல்ல வில்லை என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் ஹைதராபாத் சென்று, மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்தித்தாக தெரிகிறது.

அவர் மூலம் மற்ற எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை விரித்ததா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தான் காங்கிரஸூக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அவர் காங்கிரஸ் தலைமையிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறபப்டுகிறது. எனினும் அவர் சட்டப்பேரவைக்கு வந்து இன்னமும் பதவியேற்கவில்லை. இதனால் ஆனந்த் சிங் பற்றிய சர்ச்சை இன்னமும் தொடர்கிறது.

அதே சமயம் பாஜகவிற்கு போட்டியாக காங்கிரஸூம் ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவக்குமாரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக பக்கம் சாயக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவரை காங்கிரஸூக்கு ஆதரவாக மாற்றியது சிவக்குமார்தான். அவர் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு ஆதரவாக செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான், பாஜக எம்எல்ஏக்களும் நேற்று முழுவதும் ஓட்டல் அறையில் தங்க வைக்கப்படடு பாதுகாப்பாக சொகுசு பேருந்தில் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை கண்காணிக்க பாஜக மூத்த தலைவர்கள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அவர்கள் சரியான முறையில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே  மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் பி.எஸ். எடியூரப்பா, ஆறாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.