சிபிஐ VS சிபிஐ – சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!
நாட்டின் அதி முக்கியமான மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்குள் கடந்த ஒரு வாரமாக வெடித்து வெளி வரும் சர்ச்சைகள் குழப்பங்களை அடுத்து மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ரஃபேல் ஊழல் வழக்கை விசாரிக்கத் தொடங்கி யதால்தான் சிபிஐயின் இயக்குனர் அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறது காங்கிரஸ் கட்சி. மேலும் நாட்டிலுள்ள அனைத்து சிபிஐ அலுவலகங்கள் முன்னும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. மத்திய பாஜக அரசு சிபிஐயை தனது கைப்பாவையாக பயன்படுத்தி சிபிஐ இயக்குனரை மாற்றியதை கண்டித்தும் சிபிஐயின் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்று இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே சிபிஐயின் சீஃப் டைரக்டர் பதவியில் இருந்து தன்னை விடுவித்ததை எதிர்த்தும், நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குனராக நியமித்ததை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவோடு, ‘காமன் கேஸ்’ என்ற தொண்டு நிறுவனமும் சிபிஐ இயக்குனர் மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவையும் ம் விசாரித்தது. அலோக் வர்மாவுக்காக மூத்த வழக்கறிஞர் நாரிமன் ஆஜரானார். “சிபிஐ இயக்குனர் என்பவர் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட கமிட்டியால் நியமிக்கப்படுபவர். அவரை மத்திய அரசு இரவோடு இரவாக மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை” என்று வாதாடினார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே கவுல் மற்றும் கே.எம் ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு வழங்கிய உத்தரவில் ‘‘சிபிஐயின் தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்ட அக்டோபர் 23-ம் தேதி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் இதுவரை எடுத்த எந்த முடிவையும் நடைமுறைபடுத்தக் கூடாது.
அடுத்த விசாரணை நவம்பர் 12-ம் தேதி நடைபெறும். அதுவரை முக்கியமான கொள்கை முடிவு எதையும் நாகேஸ்வர் ராவ் எடுக்கக் கூடாது. சிபிஐ அதிகாரிகள் மீதான முறைகேடு புகார் தொடர் பான விசாரணையை இரண்டு வார காலங்களுக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையம் முடித்துக் கொள்ள வேண்டும்.
முன்னாள் நீதிபதி பட்நாயக் இந்த விசாரணையை கண்காணிப்பார். அதிகாரிகள் அளித்த புகார் தொடர்பாக விசாரணையை முடிக்க போதிய ஆவணங்கள் தரப்படவில்லை என மத்திய கண் காணிப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை 10 நாட்க ளுக்குள் சிபிஐ சமர்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு, சிபிஐ, அலோக் வர்மா சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்து வழக்கு விசாரணை நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.