September 20, 2021

ஆயுள் தண்டனை என்பது அந்த கைதியின் ஆயுள் முழுமைக்குமான சிறை தண்டனைதான்! – சுப்ரீம் கோர்ட் அதிரடி

குஜராத் மாநிலத்தில் மஞ்சித் சிங் என்ற கைதி தீவிரவாத செயல்பாடுகளுக்காக கைது செய்யப்பட்டு பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறை ஒன்றில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார்.அவருக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு 3 மாதங்கள் ‘பரோல்’ வழங்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்திசிங் ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.

jail june 30

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “சம்பந்தப்பட்ட அரசாங்கம் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 401–ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அந்த கைதியை விடுதலை செய்ய முடிவெடுத்தால் ஒழிய, ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்பது அந்த கைதியின் ஆயுள் முழுமைக்குமான சிறை தண்டனை ஆகும்.

குறிப்பிட்ட கைதி சிறையில் 20 ஆண்டுகள் தண்டனையை கழித்து இருந்தாலும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் உரிமை கோர முடியாது. அவரை தானாக விடுதலை செய்யவும் முடியாது. பல்வேறு மாநிலங்களின் சிறை விதிகள் அல்லது சிறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சட்ட வழிமுறைகள் இந்திய தண்டனை சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை மீறி இருக்க முடியாது.

இந்த வழக்கில் தண்டனை பெற்ற மஞ்சித் சிங் பல்வேறு கிரிமினல் சதிகள், நாசகார வேலைகள், ஆயுத கடத்தல், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தண்டனை அடைந்தவர். அவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஆயுதங்கள் கடத்துவதற்கு வாகனங்களை பல்வேறு இடங்களில் வாங்கியது போன்ற நடவடிக்கைகள் அவருக்கு பரந்த அளவில் தொடர்புகள் இருப்பதை நிரூபிக்கிறது. இது போன்ற தொடர்புகள் தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க வழிவகுக்கலாம். எனவே பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் இவருக்கு பரோல் வழங்கியிருக்கக்கூடாது. எனவே பஞ்சாப் அரியானா ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை கைதி மஞ்சித் சிங்குக்கு வழங்கப்பட்ட ‘பரோல்’ ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.