தேர்தலின் போது மதம், ஜாதியை பயன்படுத்தக் கூடாதுன்னா.. கூடாது! – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

தேர்தலின் போது மதம், ஜாதியை பயன்படுத்தக் கூடாதுன்னா.. கூடாது! – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 1995-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் “இந்துத்துவா அல்லது இந்து மதம் என்பது இந்திய துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறை ஆகும். ஒரு வேட்பாளர் அதை சேர்ந்தவராக இருப்பதால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது” என்று கூறி இருந்தது.இதை மறு பரிசீலனை செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் இதனுடன் தொடர்புடைய மேலும் பல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.

sc jan 3

இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது வந்தது.

மதத்தின் பெயரில் ஓட்டு கேட்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-வது பிரிவின்படி ஊழல் போன்றதா? என்ற கேள்வியின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதன் இறுதி விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முடிந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அப்போது தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், எம்.பி.லோகூர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் உள்ளிட்ட 4 நீதிபதிகள் சாதி, மத, மொழி, இனம், சமூக அடிப்படையில் வாக்கு சேகரிப்பது தேர்தல் விதிகளின்படி குற்றமே என்றனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)-ல் தேர்தல் ஊழல் தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் மதம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மதத்தின் பெயரில் வாக்கு சேகரிப்பது முறைகேடு என்றனர்.

ஆனால், அதே அமர்வில் இருந்த யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள மதம் என்ற வார்த்தை வேட்பாளருடைய மதத்தை சுட்டிக் காட்டுவதே ஆகும் என்றனர்.7 பேர் கொண்ட அமர்வில் 4 நீதிபதிகள் தேர்தலின்போது சாதி, மதம், மொழி, இனத்தின் பெயரில் வாக்குகள் கோருவதும் ஊழலே என தெரிவித்ததால். இந்த வழக்கில் பெருமான்மை நீதிபதிகள் சொன்னது தீர்ப்பானது.

பெரும்பான்மை நீதிபதிகள் அடிப்படையில் தீர்ப்பு இதுதான் :

தேர்தல் சட்டவிதிமுறைகளை மிகவும் விரிவாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்தபோது, மதம், இனம், சாதி, வகுப்பு அல்லது மொழியின் பெயரால் ஓட்டு கேட்பதும், மத, தேசிய சின்னங்களை அடையாளப்படுத்தி ஓட்டு கேட்பதும், வேண்டுகோள் விடுப்பதும் ஒரு ஊழல் நடவடிக்கைதான் என்பது உறுதியாகிறது. தவிர இது எந்தவொரு வேட்பாளருக்கு எதிராக அமைந்தாலும் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் செயலாகத்தான் கருதப்படும். எனவே சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, அவருடைய முகவர்களோ ஓட்டு கேட்க கூடாது.

தேர்தல் என்பது மதசார்பற்ற நடவடிக்கை ஆகும். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர்களிடம் மதம், சாதி, இனம், மொழி ஆகியவற்றை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதமானது ஆகும். தேர்தலை நாம் சாதி, மதத்தின் அடிப்படையில் நடத்த அனுமதிக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதியும் மதசார்பற்றவராகத்தான் செயல்படவேண்டும்.

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் நடைபெறும்போது தேர்தல் கமிஷன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதேபோல் தேர்தல் பிரசாரங்களும் சாதி, மத அடிப்படையில் நடக்க அனுமதிக்க கூடாது. மதத்தின் பழக்க வழக்கங்களையும், அவற்றை பிரசாரம் செய்வதற்கும் சுதந்திரம் உண்டு. அதே நேரம் மதத்தை தேர்தல் காரணங்களுக்காக எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது.

Related Posts

error: Content is protected !!