September 18, 2021

கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத்ராய் தலைமையில் 4 பேர் கமிட்டி : சுப்ரீம் கோர்ட்டு நியமனம்

ஐபிஎல் சூதாட்ட புகார் எதிரொலியால், இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) சீரமைப்பதற்காக, லோதா கமிட்டியை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்திருந்தது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக நீடிக்க தடை, ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்பில் செயல்படக் கூடாது, ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகளாக இருக்கக் கூடாது போன்ற பரிந்துரைகள் பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தின. இதனால் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி வழங்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தின் கைகள் கட்டப்பட்டது. இதனால், லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வந்த நிலையில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்தாததுடன், கோர்ட்டுக்கு தவறான தகவலை அளித்ததாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த 2-ந் தேதி பதவியில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டது.

criket jan 31

அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை கவனிக்க தகுதியான நபர்களின் பெயர் பட்டியலை சிபாரிசு செய்யும் படி அனில் திவான், கோபால் சுப்பிரமணியம் ஆகிய வக்கீல்களை நீதிபதிகள் பணித்து இருந்தனர். அதன்படி அவர்கள் இருவரும் புதிய நிர்வாகிகள் பட்டியலை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்து இருந்தனர். அத்துடன் சில மாநில சங்கங்கள் சார்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல் தரப்பிலும் பெயர்களை சிபாரிசு செய்ய அனுமதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான பெயர்களை பி.சி.சி.ஐ. சார்பில் ஆஜரான வக்கீல் அர்விந்த் தாதர் சமர்ப்பித்து இருந்தார்.

புதிய நிர்வாகிகள் அறிவிப்பு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட நிர்வாகத்தை கவனிக்க, முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய், வரலாற்று ஆராய்ச்சியாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் (ஐ.டி.எப்.சி) நிர்வாக இயக்குனர் விக்ரம் லிமாயே, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் கொண்ட 4 பேர் குழுவை நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த குழுவின் தலைவராக வினோத்ராய் இருப்பார் என்றும் அறிவித்தனர்.வருகிற 2-ந் முதல் 4-ந் தேதி வரை நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அமிதாப் சவுத்ரி, அனிருத் சவுத்ரி மற்றும் ஐ.டி.எப்.சி. நிர்வாக இயக்குனர் விக்ரம் லிமாயே ஆகியோருக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளரை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை வக்கீல் முகுல் ரோத்தகி விடுத்த வேண்டுகோளை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி, வாரிய வக்கீல் உதவியுடன் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை 4 பேர் கொண்ட நிர்வாக கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். லோதா கமிட்டி சிபாரிசுகள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை 4 பேர் கொண்ட நிர்வாக கமிட்டியினர் 4 வாரத்திற்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.